கம்பம் அருகே டீக்கடைக்காரர் அடித்துக்கொலை; காரணம் என்ன? போலீசார் விசாரணை
கம்பம் அருகே டீக்கடைக்காரர் மண்வெட்டி பிடியால் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.;
கம்பம் அருகே டீக்கடைக்காரர் மண்வெட்டி பிடியால் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
டீக்கடைக்காரர்
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கிழக்கு வீதியை சேர்ந்தவர் அழகுபகவதி (வயது 42). இவர் அங்குள்ள கருப்பசாமி கோவில் தெருவில் டீக்கடை நடத்தி வந்தார். இவருக்கு மீனா (35) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்தநிலையில் இன்று காலை கருப்பசாமி கோவில் தெருவில் இருந்து விவசாய தோட்டங்களுக்கு செல்லும் பாதையில் அழகுபகவதி பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் உத்தமபாளையம் போலீஸ் உதவி சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா, ராயப்பன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அழகுபகவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
அடித்துக்கொலை
மேலும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் மண்வெட்டியின் பிடிக்கட்டை கிடந்தது. அதனை போலீசார் பார்த்தபோது, அதில் ரத்தம் படிந்திருந்தது. இதனால் அழகுபகவதி மண்வெட்டி பிடியால் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.
இதற்கிடையே தேனியில் இருந்து கைரேகை நிபுணர் கொலை நடந்த இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்தார். அதேபோல் மோப்பநாய் லக்கி வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது மோப்பநாய் கொலை நடந்த இடத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் ஓடி நின்றது. ஆனால் அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
காரணம் என்ன?
ஆனால் அழகுபகவதி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுதொடர்பாக ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தங்களது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
டீக்கடைக்காரர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் காமயகவுண்டன்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.