தேயிலை தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது
வால்பாறையில் தொடர் மழையால் தேயிலை தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் மலைப்பாதையில் லேசான மண்சரிவு ஏற்பட்டு உள்ளது.
வால்பாறை
வால்பாறையில் தொடர் மழையால் தேயிலை தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் மலைப்பாதையில் லேசான மண்சரிவு ஏற்பட்டு உள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம்
வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து விட்டுவிட்டு கனமழையாக பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் அடிப்படை அணையாக விளங்கும் சோலையாறு அணை தனது முழு கொள்ளளவான 160 அடியை தாண்டி 163 அடியை எட்டியுள்ளது.
சோலையாறு அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு, வினாடி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தநிலையில் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் கனமழை காரணமாக சோலையாறு அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
வெள்ள அபாய எச்சரிக்கை
நேற்று மழை சற்று குறைந்த நிலையில் இன்று அதிகாலை முதல் மீண்டும் விட்டு விட்டு கனமழையாக பெய்து வருகிறது .இதனால் அணையின் பாதுகாப்பு கருதி எப்போது வேண்டுமானாலும் 3 மதகுகளும் மீண்டும் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்படலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வருவாய் துறை சார்பில் சோலையாறு அணையின் கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை ஒலிபெருக்கி மூலம் விடுக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் சோலையாறு அணையில் முகாமிட்டு தண்ணீர் வரத்தை கண்காணித்து வருகின்றனர்.
தொழிலாளர்கள் அவதி
சோலையாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் உருளிக்கல் எஸ்டேட் தேயிலை தோட்டங்களை ெவள்ளம் சூழ்ந்ததால், தொழிலாளர்கள் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் அய்யர்பாடி எஸ்டேட் அருகே லேசான மண்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளமலைடனல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வரட்டுப்பாறை பகுதியில் இருந்து அணலி எஸ்டேட் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் தண்ணீர் பாய்ந்து செல்வதால் காபி தோட்டங்களுக்கு பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். வருவாய்துறையினர், நகராட்சி நிர்வாகத்தினர், பொதுப்பணித்துறையினர், போலீசார், தீயணைப்பு துறையினர் உஷார் நிலையில் இருந்து வருகின்றனர்.