தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

, டான்டீ நிறுவனத்தின் 2,152 ஹெக்டேர் நிலத்தை வனத்துறைக்கு ஒப்படைக்கும்படி பிறப்பித்த ஆணையை உடனடியாக ரத்து செய்து, தேயிலைத்தோட்டக் கழகத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்

Update: 2022-11-15 10:32 GMT

சென்னை,

ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்கிக் கொண்டிருக்கும் டான்டீ நிறுவனத்தின் நிலத்தை பறித்து, அந்தப் பகுதி இயற்கை வனமாக மாற்றப்படும் என்று அமைச்சர் கூறுவது தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பதற்குச் சமம். ஒரு வேளை அந்தப் பகுதி இயற்கை வனமாக மாற்றப்பட வேண்டுமென்றால், அங்குள்ள தொழிலாளர்களை வைத்தே அதை இயற்கை வனமாக மாற்றுவதும், அவர்களை அங்கேயே தங்க வைக்க வழிவகை செய்வதும் தான் பொருத்தமாக இருக்கும்.

இதைவிட்டு விட்டு தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்புவது என்பது இயற்கை நியதிக்கு மாறானது. அவர்களுடைய வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பும், இருப்பிடமும் பறிபோவதை ஒருநாளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களை வேலையை விட்டு அனுப்புவது என்பதும், இருப்பிடங்களை காலி செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துவதும் அவர்களை நாடு கடத்துவதற்கு சமம்.

இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தி.மு.க. அரசின் தோட்டத் தொழிலாளர் விரோதக் கொள்கைக்கு அ.தி.மு.க.வின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, டான்டீ நிறுவனத்தின் 2,152 ஹெக்டேர் நிலத்தை வனத்துறைக்கு ஒப்படைக்கும்படி பிறப்பித்த ஆணையை உடனடியாக ரத்து செய்து, தேயிலைத்தோட்டக் கழகத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்