தலையில் குழவி கல்லைப்போட்டு மனைவி படுகொலை-டீ மாஸ்டர் கைது

சேலம் அருகே தலையில் குழவி கல்லைப்போட்டு மனைவியை படுகொலை செய்த டீ மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-08 22:50 GMT

டீ மாஸ்டர்

சேலம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூர் தேவாங்கர் காலனியை சேர்ந்தவர் செல்வம் (வயது 68). இவர் அயோத்தியாப்பட்டணம் ராமர் கோவில் அருகே உள்ள ஒரு பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயந்தி (65). இவர்களுக்கு நாகராஜ் என்ற மகனும், கோகிலா என்ற மகளும் இருந்தனர். இதில் கோகிலா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

நாகராஜ் திருமணமாகி குடும்பத்தினருடன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் வசித்து வருகிறார். இதனால் செல்வம், ஜெயந்தி ஆகியோர் மட்டும் வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் ஜெயந்தி கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டது போல் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

குழவி கல்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த செல்வம் வீட்டில் இருந்த குழவி கல்லை எடுத்து மனைவி ஜெயந்தியின் தலையில் ஓங்கி போட்டார். பின்னர் அவர் வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

நேற்று காலை செல்வம் அயோத்தியாப்பட்டணம் ராமர் கோவில் அருகே உள்ள ஒரு டீக்கடையில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த தேவாங்கர் காலனியை சேர்ந்த சசிகுமார் என்பவரிடம் செல்வம், எனக்கும், மனைவிக்கும் இடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டது. அப்போது அவருடைய தலையில் குழவி கல்லை தூக்கி போட்டுவிட்டேன். மனைவி உயிருடன் இருக்கிறாரா?, செத்துவிட்டாரா? என்பது தெரியாது. ஆகையால் நீ சென்று பார்த்து எனக்கு தகவல் கொடு என்றார்.

கைது

இதையடுத்து செல்வம் வீட்டுக்கு விரைந்து சென்று சசிகுமார் பார்த்தார். அப்போது அங்கு ரத்த வெள்ளத்தில் ஜெயந்தி பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து வீராணம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி, உதவி கமிஷனர்கள் சரவணகுமரன், நாகராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முருகன், கணேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் ஜெயந்தியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்