கோவில் இடங்களில் வசிப்பவர்களுக்கும் வரிவசூல் செய்ய வேண்டும்
சீர்காழியில் கோவில் இடங்களில் வசிப்பவர்களுக்கும் வரிவசூல் செய்ய வேண்டும் என்று நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சீர்காழி:
சீர்காழியில் கோவில் இடங்களில் வசிப்பவர்களுக்கும் வரிவசூல் செய்ய வேண்டும் என்று நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நகர்மன்ற கூட்டம்
சீர்காழி நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் நகரசபை தலைவர் துர்கா ராஜசேகரன் தலைமையில் நடந்தது. ஆணையர் வாசுதேவன், பொறியாளர் சித்ரா, ஓவர்சியர் விஜயேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தீர்மானத்தை நகராட்சி எழுத்து ராஜகணேஷ் படித்தார். தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்களது பகுதி கோரிக்கைகளை தெரிவித்த விவரம் வருமாறு:-
வளர்ச்சிப்பணிகள்
வேல்முருகன் (பா.ம.க.):- சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவில் இடங்களில் வசிப்பவர்களுக்கும் வரி வசூல் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜசேகர் (தே.மு.தி.க.):- எனது வார்டு பகுதியில் பூங்கா வேலை இதுவரை தொடங்கப்படவில்லை. வேலை தொடங்க முன்வரவில்லை என்றால் வேறு ஒப்பந்ததாரருக்கு பணிகளை வழங்கி மேற்கொள்ளலாம். கடந்த ஆண்டிற்கான வரவு, செலவு விவரங்கள் தெரிவிக்க வேண்டும். நகர் முழுவதும் சாக்கடை கழிவு நீரை அகற்றி சீர் செய்ய வேண்டும்.
நேரில் சென்று ஆய்வு
ரேணுகா (தி.மு.க.):- வார்டுகளில் குப்பைகளை சரியான முறையில் சுத்தம் செய்வது கிடையாது. இதனால் கவுன்சிலர்கள் வார்டுகளில் நேரில் சென்று ஆய்வு செய்து தகவல் தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சாமிநாதன் (தி.மு.க.):- சீர்காழி நகராட்சியில் வரி வசூலில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு நன்றி தெரிவித்தார். துர்கா ராஜசேகரன் (நகர்மன்ற தலைவர்):- கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த 5 மாதங்களில் 80 சதவீத வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதைப்போல் கோவில் இடங்களில் வசிப்பவர்களுக்கு வரி வசூல் செய்வது தொடர்பாக நகர்மன்ற கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றி அரசின் கவனத்திற்கு அனுப்பப்படும். நகரில் குப்பைகளை சுத்தம் செய்வதற்கு தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் நகரில் தினசரி தூய்மை பணிகள் திறம்பட செய்யப்படும் என்றார்.