30 சதவீத போனஸ் வழங்கக்கோரி டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
30 சதவீத போனஸ் வழங்கக்கோரி டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டாஸ்மாக் பணியாளர்களுக்கு 30 சதவீத தீபாவளி போனஸ் வழங்கக்கோரியும், இதற்காக குரல் எழுப்பிய சங்கத்தின் மாநில தலைவர் சரவணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால் அந்த ஆணையை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொருளாளர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட செயலாளர் ரமேஷ் வரவேற்றார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில அமைப்பு செயலாளர் சிவக்குமார் கண்டன உரையாற்றினார். திருச்சி டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் சத்தியசுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். இதில் நிர்வாகிகள் சிவக்கொழுந்து, கேசவன், சுப்பிரமணியன், அசோகன், சோழன், சிவமணி, முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.