பேரம்பாக்கத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடைகள்; இடமாற்றம் செய்ய கோரிக்கை
பேரம்பாக்கத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் கிராமத்தில் பிரதான நுழைவு பகுதியில் எதிர் எதிர் திசையில் 2 அரசு டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ளது. இந்த டாஸ்மாக் கடைகள் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் சாலையில் உள்ளது. மதுபிரியர்கள் சாலையோரம் அமர்ந்து மது அருந்துவதால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ- மாணவிகள், பெண்கள் என பலதரப்பட்ட பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். இது சம்பந்தமாக நேற்று தே.மு.தி.க கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர் தலைமையில் கிழக்கு ஒன்றிய செயலாளர் மணவாளன், தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், வக்கீல்கள் அணி துணை செயலாளர் யுவராஜ், மாவட்ட நிர்வாகி தியாகராஜன், கருணாகரன், சதீஷ் குமார், சரவணன், சுரேஷ், முரளிதரன் உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசை நேரில் சந்தித்து மேற்கண்ட டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.