கெலமங்கலத்தில் உள்ள 3 மதுக்கடைகளால் பொதுமக்களுக்கு இடையூறு-இடமாற்றம் செய்ய கோரிக்கை

Update: 2022-10-29 18:45 GMT

ராயக்கோட்டை:

கெலமங்கலத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக அடுத்தடுத்து 3 அரசு மதுக்கடைகள் இருப்பதாகவும், அதை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கைஎழுந்துள்ளது.

மதுக்கடைகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்டது கெலமங்கலம் பேரூராட்சி. அங்கு தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில் துளசி நகர் உள்ளது. இந்த பகுதியில் சாலை ஓரத்தில் ஒரே இடத்தில் 3 அரசு மதுக்கடைகள் அடுத்தடுத்து அமைந்துள்ளன.

இந்த மதுக்கடைகளால் அந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகள் அந்த சாலையை கடந்து செல்ல முடியவில்லை. குடிபோதையில் வருபவர்கள் அவர்களிடம் தகராறு செய்கிறார்கள். அதே போல மாலை நேரங்களில் பெண்கள் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இடமாற்றம் செய்ய வேண்டும்

குடிபோதையில் வரும் ஆசாமிகள் அந்த பகுதியில் தகராறில் ஈடுபடுவதும், போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துவதும், விபத்துகளில் சிக்குவதும் தொடர்ந்து நடந்து வருகின்றன. கோவில்கள், பள்ளிகள் மற்றும் மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக மதுக்கடைகளை இயங்க கூடாது என்று ஏற்கனவே கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்த 3 மதுக்கடைகளையும் வேறு இடத்திற்கு மாற்றிட வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

குற்ற செயல்கள்

கெலமங்கலம் பேரூராட்சி தலைவர் கே.பி.தேவராஜ்:-

எங்கள் பேரூராட்சியில் அடுத்தடுத்து மக்களுக்கு இடையூறாக 3 மதுக்கடைகள் உள்ளன. இதை அகற்றிட வேண்டும் என்று நீண்ட நாட்களாக கூறி வருகிறேன். இந்த மதுக்கடைகளால் மக்கள் பல சிரமங்களை சந்திக்கிறார்கள். மேலும் பல்வேறு குற்ற செயல்களும் நடக்கின்றன. இந்த மதுக்கடைகளை ஊருக்கு ஒதுக்குபுறமாக வேறு இடத்திற்கு மாற்றிட வேண்டும்.

ஜெக்கேரியை சேர்ந்த சமூக ஆர்வலர்எஸ்.ராஜேஷ்குமார்:-

கெலமங்கலம் துளசி நகரில் சாலையோரம் உள்ள மதுக்கடைகளால் சாலையில் கூட்டம் அதிக அளவில் உள்ளது. மேலும் போதையில் வரும் ஆசாமிகள் சாலையை கடந்து விபத்துகளில் சிக்குகிறார்கள். இதனால் அப்பாவி பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்படும் சூழல்உள்ளது.

மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இடையூறாக இந்த மதுக்கடைகள் உள்ளன. எனவே அதிகாரிகள் இந்த கடைகளை ஆய்வு செய்து, வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்