டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.4 லட்சம் மதுபாட்டில்கள் கொள்ளை

வீரவநல்லூர் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.4 லட்சம் மதுபாட்டில்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

Update: 2023-05-29 20:39 GMT

சேரன்மாதேவி:

வீரவநல்லூர் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.4 லட்சம் மதுபாட்டில்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

டாஸ்மாக் கடை

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள உப்பாத்து காலனியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையானது வீரவநல்லூர் - நெல்லை பிரதான சாலையிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ளது. இக்கடை தனியாக இருப்பதால் வீரவநல்லூர் கிளாக்குளம் பகுதியை சேர்ந்த முத்தையா மகன் ஆண்டபெருமாள் (வயது 40) என்பவர் இரவு காவலாளியாக உள்ளார். மேலும் அங்கு கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் மேற்பார்வையாளர் தாயுமானவர் மற்றும் ஊழியர்கள் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றனர். இரவில் காவலாளி ஆண்ட பெருமாள் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிற்கு சென்று உறங்கியுள்ளார்.

கதவு உடைப்பு

இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல், டாஸ்மாக் கடையின் வெளிப்புற இரும்பு கதவு பூட்டு, உள்புறம் உள்ள ஷட்டர் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடிச் சென்றுள்ளனர்.

நேற்று வழக்கம்போல் டாஸ்மாக் ஊழியர்கள் கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுகுறித்து வீரவநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்