வேலை செய்யாமல் சம்பளம் பெற்ற டாஸ்மாக் ஊழியர்கள்

குமரி மாவட்ட டாஸ்மாக் அதிகாரி லஞ்சம் வாங்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் வேலை செய்யாமல் டாஸ்மாக் ஊழியர்கள் சம்பளம் பெற்றதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-10-18 23:00 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்ட டாஸ்மாக் அதிகாரி லஞ்சம் வாங்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் வேலை செய்யாமல் டாஸ்மாக் ஊழியர்கள் சம்பளம் பெற்றதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குமரி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் லஞ்சம் வாங்கியது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் அம்பலமாகியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

லஞ்ச ஒழிப்பு போலீசார்

குமரி மாவட்ட டாஸ்மாக் மேலாளராக விஜய சண்முகம் (வயது 50) என்பவர் பணியாற்றி வருகிறார். இவருடைய சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை செல்லன் நகர் ஆகும்.

இவர் நாகர்கோவில் டதி பள்ளி சந்திப்பு பகுதியில் உள்ள கட்டிடத்தில் அறை எடுத்து தங்கி உள்ளார். இவர் டாஸ்மாக் விற்பனையாளர்களிடம் லஞ்சம் வாங்குவதாகவும், அதற்கு டாஸ்மாக் கடையின் விற்பனையாளர் உடந்தையாக இருப்பதாகவும் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்தன.

ரூ.1¾ லட்சம் சிக்கியது

அதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு பீட்டர் பால் தலைமையிலான போலீசார் கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 14-ந்தேதி இரவு 8 மணி அளவில் நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் பைப்புவிளை என்ற இடத்தில் டாஸ்மாக் மேலாளர் விஜய சண்முகம் காரை விட்டு இறங்கி சாலையோரம் நின்று கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள டாஸ்மாக் கடையின் விற்பனையாளரும், டாஸ்மாக் மேலாளரின் கார் டிரைவருமான ரெஜின் (47) தனது வீட்டில் இருந்து வந்து விஜய சண்முகத்தின் காரை எடுக்க முயன்றார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் பிடித்தனர். அப்போது டாஸ்மாக் கடைகளில் ரூ.1லட்சத்து 77 ஆயிரம் லஞ்சமாக பெற்று தனது வீட்டில் வைத்து இருப்பதாக ரெஜின் கூறினார். அதன்பேரில் போலீசார் பணத்தை பறிமுதல் செய்து இருவரிடமும் விசாரணை நடத்தனார்கள்.

வேலை செய்யாமல்...

இந்த நிலையில் நெல்லையில் உள்ள குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களின் ஆய்வுக்குழு அதிகாரியான மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின் விவரம் வருமாறு:-

மாவட்ட மேலாளர் விஜய சண்முகம், மதுபானக்கடை விற்பனையாளர்களிடம் இருந்து பொதுமக்களுக்கு அதிகபட்ச சில்லறை விற்பனை விலையைவிட அதிக தொகைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்தால் அதனை தணிக்கை செய்து அந்த கடை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காகவும், தமிழகத்தில் உள்ள மதுபானக்கடைகளில் எண்ணிக்கைகளை குறைத்த போது அந்த கடைகளில் பணிபுரிந்த பணியாளர்களை மீதமுள்ள கடைகளில் பணியமர்த்தியதால் மதுபானக்கடைகளில் அளவுக்கு அதிகமான பணியாளர்கள் பணிபுரிந்தனர். அவ்வாறு விற்பனைக்கு தேவையான பணியாளர்களை தவிர மற்ற பணியாளர்கள் சுழற்சி முறையில் தங்களது சொந்த வேலைகளை கவனித்துக் கொண்டு அரசு ஊதியம் பெறுவதை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காகவும் தனது வாகன ஓட்டுனரான விற்பனையாளர் ரெஜின் மூலம் லஞ்ச பணம் வசூல் செய்து குற்றமுறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது தெரிய வருகிறது.

இவ்வாறு முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்