குடியிருப்பு பகுதியில் மதுபானக்கடை அமைக்க எதிர்ப்புகுடியிருப்பு பகுதியில் மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு
திருப்பூரை அடுத்த சேவூர், அ.குரும்பபாளையம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலக நுழைவுவாசல் முன் திரண்டனர். தங்கள் பகுதியில் மதுபான கடை அமைப்பதை கைவிடக்கோரி மனு கொடுக்க வந்தனர். முக்கியமானவர்களை மட்டும் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்துக்குள் போலீசார் அனுமதித்தனர். மீதம் உள்ளவர்கள் வெளியே காத்திருந்தனர்.
பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சேவூர் அருகே பந்தம்பாளையத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருக்கு சொந்தமான இடத்தில் மதுபானக்கடை மற்றும் மனமகிழ் மன்றம் வர இருப்பதாக அறிகிறோம். மதுக்கடை அமைய உள்ள இடத்தை சுற்றிலும் குடியிருப்புகள் உள்ளன. கூலித்தொழிலாளர்கள், பெண்கள், குழந்தைகள் அதிகம் வசிக்கிறோம். மதுக்கடை அமையும் இடத்தில் இருந்து 50 அடி தூரத்துக்குள் குடியிருப்புகள் உள்ளன. கருவலூரில் இருந்து சேவூர் செல்லும் ரோட்டில் மதுபானக்கடை அமைந்தால் அந்த வழியாக மக்கள் பாதுகாப்பாக செல்ல முடியாத நிலை ஏற்படும். குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகும். இந்த பகுதியில் மதுபானக்கடை அமைப்பதை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.