தை அமாவாசையையொட்டி தாமிரபரணி ஆற்றங்கரையில்முன்னோர்களுக்கு தர்ப்பணம்

தை அமாவாசையையொட்டி, தாமிரபரணி ஆற்றங்கரையில் ஏராளமானவர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.;

Update:2023-01-22 02:29 IST

தை அமாவாசையையொட்டி, தாமிரபரணி ஆற்றங்கரையில் ஏராளமானவர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

தை அமாவாசை

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மற்றும் தை மாத அமாவாசை தினத்தன்று பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவார்கள். அதன்படி தை அமாவாசை தினமான நேற்று அதிகாலையிலே நெல்லை தாமிரபரணி ஆற்று படித்துறைகளில் பொதுமக்கள் திரண்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

வெளியூர்களில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து தாமிரபரணி ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

நெல்லை குறுக்குத்துறை

நெல்லை குறுக்குத்துறை இசக்கியம்மன் கோவில் படித்துறை, முருகன் கோவில் படித்துறை, வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் படித்துறை, கைலாசபுரம் தைப்பூச மண்டபம், சிந்துபூந்துறை, மணிமூர்த்தீசுவரம், அருகன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தாமிரபரணி ஆற்றங்கரையில் புரோகிதர்கள் முன்னிலையில், திரளானவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

அரிசி மாவு, எள், தேன் கலந்த பிண்டங்களை ஆற்றில் கரைத்து பின்னர் புனித நீராடி வழிபட்டனர். நெல்லை குறுக்குத்துறை, தைப்பூச மண்டபம், பேராட்சி அம்மன் கோவில் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

பாபநாசம்

பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானவர்கள் குடும்பத்துடன் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பர்.

அதன்படி நேற்று தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமானவர்கள் அதிகாலையிலேயே பாபநாசத்தில் குவிந்தனர். பாபநாசநாதர் கோவில் முன் உள்ள தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி, எள், தண்ணீர் தெளித்து தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

மேலும் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதனால் கோவில் வளாகம், படித்துறை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

சிறப்பு பஸ்கள்

மேலும் பாபநாசத்துக்கு சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு முன்பாக போலீசார் சோதனை சாவடி அமைத்து தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நெல்லை, தென்காசி, கடையம், ஆலங்குளம், முக்கூடல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

அம்பை

இதேபோல் அம்பை, கல்லிடைக்குறிச்சி, சின்னசங்கரன்கோவில் ஆகிய இடங்களில் தாமிரபரணி ஆற்றிலும் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

குற்றாலம்

தை அமாவாசையொட்டி குற்றாலத்தில் நேற்று காலையில் இருந்தே ஏராளமானவர்கள் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதற்காக அதிகாலை முதல் புரோகிதர்கள் அருவிக்கரையில் காத்திருந்தனர்.

அருவியில் புனித நீராடிவிட்டு, அவர்களிடம் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துவிட்டு புரோகிதர்கள் கொடுத்த எள்ளை தண்ணீரில் கரைத்துச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்