திருமண ஆசை காட்டி ஏமாற்றியதாக காதலன் வீட்டின் முன்பு இளம்பெண் தர்ணா - போலீசார் விசாரணை
ஓமலூர் அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காதலன் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா போராட்டம்.
ஓமலூர்,
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஊமைகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் புகழரசன்(வயது28). இவர் சென்னை போரூரில் உள்ள கார் உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று ஊமைகவுண்டம்பட்டியில் உள்ள புகழரசன் வீட்டு முன்பு சென்னை பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த ஹேமப்பிரியா (29) என்பவர், புகழரசன் திருமண ஆசை காட்டி ஏமாற்றியதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறியதாவது,
எனக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான். கருத்து வேறுபாடு காரணமாக கணவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறேன். எனக்கு இன்னும் ஒரு மாதத்தில் விவாகரத்து கிடைக்க உள்ளது. சென்னைக்கு வேலைக்கு வந்த புகழரசன் எங்கள் வீட்டின் அருகே தனது நண்பர்களுடன் வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.
அப்போது என்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் எனது மகனை தனது சொந்த மகனைப் போல் பார்த்துக்கொள்வதாக கூறி உறுதியளித்தார். எங்களுக்குள் கடந்த இரண்டு வருடமாக பழக்கம் இருந்து வருகிறது.
இந்தநிலையில் புகழரசன் கடந்த 6 மாதத்துக்கு முன்பு எங்களை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதுகுறித்து சென்னை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தேன்.
அவர் சொந்த ஊருக்கு சென்று விட்டார் என்பதை கேள்விப்பட்டு இங்கு வந்தபோது அவரது குடும்பத்தினர் என்னை விரட்டி விட்டனர்.
புகழரசன் என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளிக்கும் வரை இங்கிருந்து செல்ல மாட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது சென்னை போலீஸ் ஸ்டேஷனில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக புகழரசன் எழுதிக்கொடுத்த உறுதிமொழிப் பத்திரத்தையும் போலீசாரிடம் ஹேமப்பிரியா காண்பித்தார்.
இதனையடுத்து புகழரசன் சமரசமாக செல்வதாக கூறினார் இதனையடுத்து ஹேமப்பிரியாவை போலீசார் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.