360 டன் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு

வேலூர் மாவட்டத்தில் 360 டன் உளுந்து மற்றும் பச்சைப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-01 18:22 GMT

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

360 டன் இலக்கு

மத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் (பி.பி.எஸ்.) உளுந்து மற்றும் பச்சைப்பயறு விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட உள்ளது. வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உளுந்து கிலோ ரூ.69.50-க்கும், பச்சைப்பயறு ரூ.85.58-க்கும் அடுத்த மாதம் (நவம்பர்) 29-ந் தேதி வரை கொள்முதல் செய்யப்படும்.

வேலூர் மாவட்டத்தில் 160 டன் உளுந்து மற்றும் 200 டன் பச்சைப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு பருவத்தில் உளுந்து மற்றும் பச்சைப்பயறு பயிரிடும் விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற தங்களின் நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் மற்றும் வங்கிகணக்கு புத்தகத்துடன் வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பதிவுசெய்து கொண்டு பயன்பெறலாம்.

வங்கி கணக்கில்

கொள்முதல் செய்யப்படும் விளை பொருளுக்குண்டான தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும், கூடுதல் விவரங்களுக்கு வேளாண் வணிக துணை இயக்குனர், வேலூர் வேளாண் விற்பனைக்குழு செயலாளர், வேலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்