சங்ககிரி இந்தியன் ஆயில் கிடங்கு டேங்கர் லாரி டிரைவர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

சங்ககிரி இந்தியன் ஆயில் கிடங்கு டேங்கர் லாரி டிரைவர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-24 20:42 GMT

சங்ககிரி 

சங்ககிரி அருகே நாரப்பன்சாவடியில் உள்ள இந்தியன் ஆயில் எண்ணெய் கிடங்கில் இருந்து, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாள்தோறும் 400 டேங்கர் லாரிகள் மூலம் பெட்ரோல், டீசல், வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு நேற்று காலை 9.30 மணியளவில் டேங்கர் லாரி டிரைவர்கள் திடீரென வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட டேங்கர் லாரி டிரைவர்கள் கூறும் போது, 'இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி டிரைவர்களை தரக்குறைவாக பேசி வருகிறார்கள், டேங்கர் லாரிகளுக்கு ஆயில் நிரப்ப கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் லோடு ஏற்றி சென்று இறக்குவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறோம்' என்றார்கள். ஒரு மணி நேரத்தும் மேலாக போராட்டம் தொடர்ந்து நடந்து வந்தது. அதன்பிறகு சங்ககிரி இந்தியன்ஆயில் கிடங்கு அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர்களுடன் சுமூக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து காலை 11 மணியளவில் பேச்சுவார்த்தையில் இருதரப்பினர் இடையே உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து டிரைவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு தங்கள் பணிக்கு திரும்பினார்கள்.

லாரி டிரைவர்களின் திடீர் போராட்டம் எண்ணெய் கிடங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்