அனைத்து பகுதிகளுக்கும் விரைவில் தாமிரபரணி குடிநீர்
கடையநல்லூரில் அனைத்து பகுதிகளுக்கும் விரைவில் தாமிரபரணி குடிநீர் வழங்கப்படும் என்று நகராட்சி தலைவர் ஹபீபுர் ரஹ்மான் தகவல்
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சி தலைவர் ஹபீபுர் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடையநல்லூரில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம், அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி புதிய கட்டிடம் அமைத்தல், தினசரி சந்தை நெருக்கடிகளை குறைத்து மேம்படுத்துதல், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இட வசதியை மேம்படுத்தி சுகாதார வசதியை ஏற்படுத்துதல், பேட்டை மற்றும் மேலக்கடையநல்லூர் நகராட்சி பள்ளிகளின் தரம் உயர்த்துதல், புதிய கட்டிடங்களை கட்டுதல், கடையநல்லூரில் பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வருதல், அனைத்து வசதிகளுடன் கூடிய நூலகத்தை உருவாக்குதல், புதிதாக அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டுதல், அனைத்து சமுதாய நலக்கூடங்களை சீர்படுத்துதல், நகரில் மின்மயான வசதியை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.
கோடை காலத்திலும் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைத்திட தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடையநல்லூரில் அனைத்து பகுதிகளுக்கும் தாமிரபரணி குடிநீரை வழங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்து பகுதிகளுக்கும் தாமிரபரணி குடிநீர் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.