கடற்கரை கிராமங்களில் மணல் அள்ளும் அனுமதியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்;குறைதீர்க்கும் கூட்டத்தில் மீனவர்கள் வலியுறுத்தல்

குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் மணல் அள்ளும் அனுமதியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர்

Update: 2022-07-29 18:03 GMT

நாகர்கோவில்,

குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் மணல் அள்ளும் அனுமதியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர்.

மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா தலைமை தாங்கினார். கூட்டத்தில் பத்மநாபபுரம் உதவி கலெக்டர் அலர்மேல் மங்கை, மீன்வளத்துறை துணை இயக்குனர் காசிநாத பாண்டியன், உதவி இயக்குனர் மோகன்ராஜ் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மீனவர்கள் மற்றும் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்குனர் டன்ஸ்டன், குரும்பனை பெர்லின், பள்ளம் பஞ்சாயத்து தலைவர் அந்தோணி, கேசவன்புத்தன்துறை பஞ்சாயத்து தலைவர் கெபின்ஷா, முட்டம் ஜெயசுந்தரம், சி.ஐ.டி.யு. பாபு, ஜான் அலோசியஸ், அலெக்சாண்டர், ஜஸ்டின் ஆண்டனி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் மீனவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

தமிழக அரசு அனுமதி

மணவாளக்குறிச்சி அரியவகை மணல் ஆலை சார்பில் தற்போது சுமார் 1,144 ஹெக்டேர் நிலப்பரப்பில் மணல் எடுக்க மாநில அரசு அனுமதி கொடுத்திருப்பதை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு இருந்தவரை இதற்கு அனுமதி அளிக்கவில்லை. ஆனால் தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு குறும்பனை முதல் நீரோடி வரையுள்ள கடலோரங்களில் மணல் அள்ள அனுமதி வழங்கியுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆட்சியின் போது அனுமதி வழங்கப்படாத ஒரு அழிவுத்திட்டத்துக்கு 2 மாதத்தில் அரசு அனுமதி வழங்கியிருப்பது விந்தையாக உள்ளது.

எனவே அரசு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இது தொடர்பாக கருத்து கேட்புக் கூட்டங்களை மீனவ கிராமங்களில் நடத்த வேண்டும். அதற்கு முன்பு இந்த திட்டம் தொடர்பான விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும். (மீனவர்கள் பலரும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பேசியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது).

தூண்டில் வளைவு

குமரி மாவட்டத்தில் பெரியகாடு மீனவ கிராமத்தில் சேதமடைந்துள்ள தூண்டில் வளைவை சீரமைத்து மேலும் 100 மீட்டர் அதிகரித்து கட்டித்தர வேண்டும். கடற்கரை பேரூராட்சி கிராமங்களில் புதிதாக வீடு கட்ட பேரூராட்சி நிர்வாகம் அனுமதி மறுத்து வருகிறது. எனவே பேரூராட்சி நிர்வாகம் அனுமதி கொடுக்க உத்தரவிட வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மீனவர்கள் பேசினர்.

மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா:- குமரி மாவட்ட கனிமவளத்துறை சார்பில் இது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நடத்த தேவையான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக கலெக்டரிடம் தெரிவித்து அறிவிப்புகள் பத்திரிகை மூலம் வெளியிடப்படும். உங்களது கோரிக்கைள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். இதுசம்பந்தமாக சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்றார்.

நடவடிக்கை

அதிகாரிகள் பதில் அளித்து பேசியதாவது:- ஏ.வி.எம். கால்வாயை தூர்வார ஏற்கனவே ரூ.1 கோடியில் திட்ட ஆய்வு அறிக்கை தயாரித்து அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பெரியகாடு மீனவ கிராமத்தில் ரூ.17.13 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடற்கரை பேரூராட்சி கிராமங்களில் புதிதாக வீடு கட்ட கூடியவர்கள் கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியை பெற வேண்டும். குமரி மாவட்டத்தில் கதிர்வீச்சு பாதிப்பு தொடர்பாக ஏற்கனவே கடியப்பட்டணம் மற்றும் முட்டம் கிராமங்களில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சமூக மருந்தியல் துறை சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் மொத்த சராசரியை ஒப்பிடுகையில் குமரி மாவட்டத்தில் ஆண்கள், பெண்களுடைய பாதிப்பு குறைவாக இருந்ததாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும் தற்போது மீனவர்களுடைய நலன் கருதி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.58 கோடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய புற்றுநோய் சிகிச்சை மையம் அமைப்பதற்கான கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு கன்னியாகுமரி மீனவர் நல உதவி இயக்குனர் அலுவலகமும், நாகர்கோவில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் குளச்சலை தலைமையிடமாகக் கொண்டும், குளச்சல் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் தேங்காப்பட்டணத்தை தலைமையிடமாகக் கொண்டும் செயல்படும் என தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது என்றனர்.

கோரிக்கை

சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டணி கோரிக்கை மனு கொடுத்தார். அதில், 'தூத்தூரில் உள்ள பெருவாரியான மீனவ மக்கள் ஆழ்கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். அவர்கள் சுமார் 20 கி.மீ.தூரம் பயணம் செய்து குளச்சல் உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு செல்ல வேண்டி உள்ளது.எனவே தூத்தூரில் உள்ள மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தை தரம் உயர்த்தி மீன்வள உதவி இயக்குனர் அலுவலகம் அமைக்க வேண்டும்' என குறிப்பிட்டு இருந்தார்.

உடனே அதிகாரிகள் தூத்தூரில் மீனவர் மற்றும் மீன்வள உதவி இயக்குநர் அலுவலகம் அமைப்பது தொடர்பான கோரிக்கை அரசின் கவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக கூறினர்.

மேலும், அண்டை மாநிலங்களில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வரும் நமது மீனவர்களின் விசைப்படகுகளும் ஆய்வுக்கு உட்படுத்தி மானிய டீசல் வழங்குமாறு வேண்டுகோள் வைத்தார்.

அழிக்கால் மீனவ கிராமத்தில் கடல்நீர் புகுந்து, வீடுகளில்சூழ்ந்துள்ள மணலை அப்புறப்படுத்த கலெக்டர் சிறப்பு நிதி ஒதுக்க ஜஸ்டின் ஆன்டணி வேண்டுகோள் வைத்தார். அப்போது பேசிய அதிகாரிகள் இது சம்பந்தமாக ஆவண செய்வதாக கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்