ஜூலை மாதத்திற்கான நீரை வழங்கக் கோரி, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம்..!
ஜூலை மாதம் வழங்க வேண்டிய நீரை வழங்க உத்தரவிடக் கோரி, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பி உள்ளது.
சென்னை,
மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் பாசனத்திற்கு திறக்கும் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் காவிரி ஆணையம் மற்றும் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அடிப்படையில் கர்நாடக மாநில அரசு தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை வற்புறுத்தி பெறுவதற்கான நடவடிக்கைகளை உறுதியோடு அரசு செய்ய வேண்டும் என விவசாயிகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் ஜூலை மாதம் வழங்க வேண்டிய நீரை வழங்க உத்தரவிடக் கோரி, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பி உள்ளது. இதன்படி ஜூன் மாதத்திற்குரிய 9.19 டி.எம்.சி, ஜூலை மாதத்திற்குரிய 34 டி.எம்.சி தண்ணீரை வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும்.மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் இன்னும் 10 நாட்கள் மட்டுமே போதுமானதாக உள்ளது என்றும், ஜூலை மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை குறைக்காமல் வழங்க அறிவுறுத்த வேண்டும் என்றும் அந்த அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்று கர்நாடகா துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்த நிலையில் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.