'தமிழ்ப்புதல்வன்' திட்டம் ஆகஸ்ட் 9-ம் தேதி தொடக்கம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இறைப் பணியோடு சேர்த்து கல்விப் பணியும் செய்து வருகிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2024-07-31 06:27 GMT

சென்னை,

சென்னை கொளத்தூரில் கபாலீசுவரர் கல்லூரி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

கொளத்தூர் தொதிக்கு வரும்போது என்னை அறியாமல் ஒரு உற்சாகம் வருகிறது. எவ்வளவு வேலைகள் இருந்தாலும் வாரத்திற்கு ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறையேனும் கொளத்தூர் தொகுதிக்கு வந்துவிடுவேன். கொளத்தூர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றி வருகிறோம். கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. 234 தொகுதியும் எனது தொகுதிதான் என்ற அடிப்படையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

ஒவ்வொரு தொகுதியிலும் முக்கியமான 10 கோரிக்கைகளை எம்.எல்.ஏ.க்களிடம் கேட்டு செயல்படுத்தி வருகிறோம். எந்த கட்சி எம்.எல்.ஏ.,வாக இருந்தாலும் சரி, அவர்களது கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்றி வருகிறது. எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகளிலும் விருப்பு, வெறுப்பு இன்றி திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஓட்டு போடாத மக்களுக்கும் சேர்த்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 1,400-க்கும் மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. ரூ.5,000 கோடி மதிப்பிலான கோவில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இறைப் பணியோடு சேர்த்து கல்விப் பணியும் செய்து வருகிறோம். கல்லூரியில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் 'தமிழ் புதல்வன் திட்டத்தை' ஆகஸ்ட் 9-ம் தேதி கோவையில் தொடங்கி வைக்கிறேன். பட்டங்களோடு சேர்த்து பல்வேறு திறமைகளை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்