தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
இந்தி திணிப்புக்கு எதிப்பு தெரிவித்து தமிழ் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உலக தமிழ் கூட்டியக்கம், கோயமுத்தூர் தமிழ் சங்கமம், தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் ஆகிய தமிழ் அமைப்புகளின் சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், உலக தமிழ் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளருமாமான சி.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்தி திணிப்புக்கு எதிராக கோஷமிட்டனர்.
இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, நாடு முழுவதும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் இந்தியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்.
அரசு பணியாளர் தேர்வுகளில் ஆங்கில வினாத்தாள் முறையை ஒழித்துவிட்டு இந்தியை மட்டும் பயன்படுத்த வேண்டும். கேள்வித்தாள் ஆங்கிலத்தில் அளிப்பது ஒழிக்கப்படவேண்டும்.
மத்திய அரசு பணிகளுக்குத்தேர்வு செய்யப்படும்போது இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே பணி ஆணை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட இந்தித்திணிப்பு பரிந்துரைகள் அளிக்கப்பட்டு உள்ளன.
இந்திக்கு நாங்கள் எதிரியல்ல. இந்தித்திணிப்புக்குத்தான் எதிரி. இந்தித் திணிப்புக்கு எதிரான இயக்கமாக எப்போதும் செயல்படுவோம் என்றனர்