தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-30 18:33 GMT

ஆர்ப்பாட்டம்

கரூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் நாகமணிகண்டன் தலைமை தாங்கினார்.

மாநில தலைவர் அழகிரிசாமி கோரிக்கை விளக்கவுரையாற்றினார். இதில் மாவட்ட துணை தலைவர் சுரேஷ், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

பழைய ஓய்வூதிய திட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். பயணப்படியை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கு காலதாமதம் இன்றி பணி வரன்முறை செய்ய வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பதவி உயர்வு 6 ஆண்டுகளில் 30 சதவீதம் என்பதை 3 ஆண்டுகளில் 50 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

வருவாய்த்துறை பணிகளை தவிர பிற துறை பணிகளை கிராம நிர்வாக அலுவலர்கள் மீது திணிப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்ததாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

நொய்யல்

இதேபோல் புகழூர் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் வட்டத்தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தரகம்பட்டி

இதேபோல் தரகம்பட்டியில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட அமைப்பு செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்