தமிழ்நாட்டில் ரூ.1.4 லட்சம் கோடியில் 108 சாகர்மாலா திட்டங்கள் - மத்திய மந்திரி சர்பானந்தா சோனோவால்
தமிழ்நாட்டில் ரூ.1.4 லட்சம் கோடி மதிப்பில் 108 சாகர்மாலா திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாக மத்திய மந்திரி சர்பானந்தா சோனோவால் தெரிவித்தார்.
தொழில்நுட்ப மையம்
செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் சென்னை ஐ.ஐ.டி.யின் டிஸ்கவரி வளாகத்தில் மத்திய கப்பல் துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான துறைமுகங்கள், நீர்வழிகள் மற்றும் கடற்கரைகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையம் ரூ.77 கோடி செலவில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தொழில்நுட்ப மையத்தை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து மந்திரி சர்பானந்தா சோனோவால் திறந்து வைத்தார். இதன் மூலம் துறைமுகங்கள், நீர்வழிகள், கடற்கரையோரங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய வசதிகள், பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் சென்னை துறைமுக ஆணையத்தின் தலைவர் சுனில் பாலிவால், நியூ மங்களூரு துறைமுக ஆணையத்தின் தலைவர் வெங்கடரமணா அக்கராஜூ, சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் வி.காமகோடி, இந்திய கடல்சார் பல்கலைக்கழக துணைவேந்தர் மாலினி சங்கர், சென்னை ஐ.ஐ.டி. டீன் கே.முரளி, கடல் என்ஜினீயரிங் துறை தலைவர் எஸ்.நல்லய்யரசு, பேராசிரியர் சன்னாசிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். துறைமுகங்கள், நீர்வழிகள் மற்றும் கடற்கரைகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையத்தை தொடங்கி வைத்த பிறகு, மத்திய மந்திரி சர்பானந்தா சோனோவால் பேசியதாவது:-
2-வது பெரிய பொருளாதார மாநிலம்
தமிழ்நாட்டின் நேர்மையான, திறமையான உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புள்ள மக்கள் ஆகியவற்றால் இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக மாறி இருக்கிறது. மேலும் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்துறை தொழிலாளர்களைக் கொண்ட முதல் மாநிலமாகவும், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2-வது பெரிய பங்களிப்பாளராகவும் தமிழ்நாடு உள்ளது. பிரதமரின் சாகர்மாலாவின் மாற்றத்துக்கான முதன்மை திட்டம், துறைமுகம் சார்ந்த வளர்ச்சியை மேம்படுத்துவதையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு இருக்கிறது.
சாகர்மாலா திட்டங்கள்
சாகர்மாலா திட்டத்தின் கீழ் கடந்த 8 ஆண்டுகளில் துறைமுகங்களின் உள்கட்டமைப்பு நவீனமயமாக்கல், அவற்றின் இணைப்பை மேம்படுத்துதல், துறைமுகங்களின் திறனை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல், துறைமுகங்களின் ஒட்டுமொத்த செயல்பாட்டு செலவுகளை குறைத்தல், கப்பல்களின் சுழற்சி நேரத்தை குறைத்தல் மற்றும் செயல் திறனை அதிகரித்தல், பெரிய கப்பல்களை கையாளும் திறனை வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
துறைமுகங்களின் இந்த முயற்சிகளின் விளைவாக 2022-23-ம் ஆண்டில் திட்டமிடப்பட்டபடி 440 பில்லியன் டாலர் சரக்கு ஏற்றுமதியை இந்தியா அடைய உதவி செய்தது. இவ்வாறு அவர் பேசினார்.
108 திட்டங்கள்...
நிகழ்ச்சி முடிந்ததும் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'சாகர்மாலா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் ரூ.1.4 லட்சம் கோடி மதிப்பிலான 108 திட்டங்கள் செயல்படுத்தப்பட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன. இதில் ரூ.34 ஆயிரத்து 750 கோடி மதிப்பிலான 43 திட்டங்கள் ஏற்கனவே முடிக்கப்பட்டுவிட்டன. 34 திட்டங்கள் ரூ.67 ஆயிரத்து 759 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ரூ.44 ஆயிரம் கோடி மதிப்பில் 31 திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கின்றன. மத்திய, மாநில அரசுகள் இணைந்து சாகர்மாலா திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது' என்றார்.
நாட்டின் அழகான மொழி தமிழ்- மத்திய மந்திரி சர்பானந்தா சோனோவால்
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில், 'நலமா, எப்படி இருக்கீங்க...' என்று தமிழில் திணறியபடி பேசத்தொடங்கிய மத்திய மந்திரி சார்பானந்தா சோனோவால், 'நான் தமிழைப் பேச கற்றுக்கொண்டு வருகிறேன். எனக்கு உதவுங்கள்' என்று மேடையின் முன்பு அமர்ந்து இருந்தவர்களை பார்த்து பேசினார். மேலும் நாட்டின் அழகான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. அதனால் நான் அதை விரும்புகிறேன் என்று ஆங்கிலத்தில் கூறினார். அதனைத்தொடர்ந்து அவர் தமிழ்நாடு மற்றும் சென்னையை பற்றியும் பெருமையாக பேசினார். அதன் விவரம் வருமாறு:-
சென்னை மிக அழகான நகரம் இந்த நகரத்தில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழ்நாட்டிற்கு செல்வது என்றால் எப்போதுமே பிடிக்கும். அதிலும் சென்னையில் பழங்கால கோவில்கள், கலைகள், இயற்கை அதிசயங்கள், சுவையான உணவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கிறது. சென்னையின் இந்த மகத்தான ஆற்றல், சாதனை என்னை எப்போதும் வியப்பில் ஆழ்த்திய வண்ணம் இருக்கிறது. நான் சென்னையை மிகவும் விரும்புகிறேன். சென்னை மற்றும் தமிழக மக்களின் அன்பும், பாசமும் என்னை எப்போதும் ஈர்க்கிறது. அதனால் தான் நான் மீண்டும் மீண்டும் இந்த மாநிலத்தையும், நகரத்தையும் பார்வையிட விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.