தமிழகம், புதுவையில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னதாக அறிவித்திருந்தது. அதன்படி, பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து கானப்பட்டாலும், பிற்பகலில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்தது.
இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களிக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. மேலும், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
ஏற்கெனவே கேரளாவில் அடுத்த ஓரிரு நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும், இதனால், கேரளா, தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த சில நாட்களில் மழையை எதிர்பார்க்கலாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.