தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தமிழ் பாடத்தேர்வுடன் நாளை தொடங்குகிறது.;

Update: 2024-02-28 23:47 GMT

சென்னை,

பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு அடுத்தடுத்து பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது. இதில் முதலில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்க இருக்கிறது. பொதுத்தேர்வை பொறுத்தவரையில், தமிழ்நாடு, புதுச்சேரியில் பள்ளி மாணவர்களாக சுமார் 7 லட்சத்து 25 ஆயிரம் மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுத இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதுதவிர தனித்தேர்வர்கள் எத்தனை பேர் எழுதுகிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் மட்டும் 3 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும், அங்கு மாணவ-மாணவிகள் தேர்வை எழுதுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் இருப்பதாகவும் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விடைத்தாள் மற்றும் வினாத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு வருவதற்கும், மீண்டும் மாணவர்கள் எழுதும் விடைத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு சென்று வைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதுதவிர தேர்வு மையங்களில் காப்பி அடித்தல், விடைத்தாள்களை மாற்றுதல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை பிடிக்க 3 ஆயிரத்து 200 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிவறை வசதிகள் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டு உள்ளன. இதுதவிர மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. தேர்வறைக்குள் செல்போன் உள்பட மின்சாதனம் கொண்டுவர தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஹால்டிக்கெட்டில் உள்ள விதிகளை பின்பற்றி மாணவர்கள் நடக்க வேண்டும் என்றும் தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

வழக்கமாக பொதுத்தேர்வு தொடங்கும் ஒருவாரத்துக்கு முன்னதாகவே எத்தனை மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்?, அவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன?, ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? என்பன போன்ற விவரங்கள் வெளியிடப்படும். ஆனால் தற்போது அரசு தேர்வுத்துறை அந்த விவரங்களை ஏதோ பரம ரகசியம் போல பாதுகாத்து வருகின்றனர். மேலும் அந்த விவரங்களை தேர்வுக்கு முந்தைய நாளான இன்று (வியாழக்கிழமை) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்தான் வெளியிடுவார் என்றும் தெரிவிக்கின்றனர்.

நாளை தமிழ் பாடத்தேர்வுடன் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்குகிறது. அதற்கு அடுத்த தேர்வு வருகிற 5-ந் தேதி என ஒவ்வொரு தேர்வுக்கும் 3 முதல் 4 நாட்கள் இடைவெளிவிட்டு வருகிற 22-ந் தேதி வரை அவர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. இதற்கிடையில், பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு வருகிற 4-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரையிலும், அதனைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு வருகிற 26-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 8-ந் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடக்க இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்