நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராட்டம்

நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023-ஐ திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-06-22 23:41 GMT

சென்னை,

விவசாயிகளுக்கு பாதகம் விளைவிக்கும் நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நேற்று போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு மாநில தலைவர்கள் பெ.சண்முகம், குணசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் துவக்கவுரை ஆற்றினார். ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து, அரிபரந்தாமன் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு அரசு ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023-ஐ நிறைவேற்றியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தை துவக்கியுள்ளனர். எந்த விவாதமும் இல்லாமல் இந்த சட்டம் ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த சட்டம் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

கடும் எதிர்ப்பு

கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக விவசாய நிலங்களை எளிமையாக கையகப்படுத்துவதற்கான சட்டமாக உள்ளது. அன்னிய முதலாளிகளுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் சாதகமாக தமிழக அரசு 2 சட்டத்தை கொண்டு வந்தது. அதில் ஓன்று இந்த நில ஒருங்கிணைப்பு சட்டம். மற்றொன்று தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடற்ற வேலை. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் திரும்பப்பெற்று விட்டார்கள்.

ஆனால், விவசாயிகளுக்கு எதிரான நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெறவில்லை. ஏற்கனவே, பரந்தூரில் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தை எடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். இந்த சூழலில், முதலாளிகளின் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் இந்த சட்டத்தை அரசு திரும்பப் பெறவேண்டும். இது நீண்டகால போராட்டமாக அமைய போகிறது. மக்களை, விவசாயிகளை கார்ப்பரேட்டுகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக தான் இந்த போராட்டம் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்