முல்லைப்பெரியாறு அணையில் தமிழக அதிகாரிகள் ஆய்வு

முல்லைப்பெரியாறு அணையில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.;

Update: 2022-11-29 18:45 GMT

முல்லைப்பெரியாறு

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ள சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பருவமழை காலத்துக்கு ஏற்ப அணையின் நீர்மட்ட உயர்வை நிர்ணயிக்கும் ரூல் கர்வ் விதியின் படி அணையில் தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து சீராக அதிகரித்து வருகிறது. நேற்று காலை அணையின் நீர்மட்டம் 138.30 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 974 கன அடியாகவும் இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 511 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

அதிகாரிகள் ஆய்வு

இந்த நிலையில் அணையில் 142 அடியாக தண்ணீரை நிலைநிறுத்துவது தொடர்பாகவும், கண்காணிப்பு குழுவின் ஆய்வுக்கான முன்னேற்பாடு நடவடிக்கையாகவும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் குழுவினர் இந்த அணையில் நேற்று ஆய்வு செய்தனர். மதுரை மண்டல தலைமை பொறியாளர் ஞானசேகரன் தலைமையில் ஆய்வு நடந்தது.

இந்த ஆய்வுக்காக அணைக்கு சென்ற அதிகாரிகள், பிரதான அணை, பேபி அணை, மண் அணை, சுரங்கப்பகுதி, மதகுகள் ஆகியவற்றை பார்வையிட்டனர். அணையில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள், 142 அடியாக தண்ணீரை நிலைநிறுத்துவது தொடர்பாக விவாதித்தனர்.

கண்காணிப்பு குழுவிடம் முறையீடு

மேலும் கேரள அரசின் அனுமதி பெறுவது, கட்டுமான பொருட்களை அணைப் பகுதிக்கு கொண்டு செல்வதில் உள்ள சிரமங்கள் குறித்து தலைமை பொறியாளர் கேட்டறிந்தார். வருகிற 5-ந்தேதி அணையில் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்ய உள்ள நிலையில், அந்த குழுவிடம் முறையிட வேண்டிய விவரங்களை தொகுத்து வழங்க வேண்டும் என்றும் அணையின் பொறியாளர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது கண்காணிப்பு பொறியாளர் பழனிச்சாமி, செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர்கள் குமார், மயில்வாகனன், உதவி பொறியாளர்கள் ராஜகோபால், முரளிதரன், நவீன்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்