தமிழ்நாடு பெயர் சர்ச்சை - கவர்னர் ஆர்.என்.ரவி விளக்கம்
காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன் என கவர்னர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதற்கு எதிராக தமிழ்நாட்டில் திமுக, திமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் தமிழ்நாடு மக்கள் மற்றும் அரசியல் சாசனத்திற்கு எதிராக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக தமிழக அரசு குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு பெயர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கவர்னர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார்.
கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
"2023 ஜனவரி 4-ம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில் சமீபத்தில் நிறைவடந்த 'காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும்' ஒரு மாத காசி - தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்வில் வரலாற்றுப் பண்பாடு பற்றிப் பேசும் போது "காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க தமிழகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன்". அந்த காலத்தில் 'தமிழ்நாடு என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றைப் பண்பாட்டுச் சூழலில் 'தமிழகம்' என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.
எனது கண்ணோட்டத்தை 'தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல' பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது பேச்சின் அடிப்படை புரியாமல் ஆளுநர் 'தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை' எனும் வாதங்கள் விவாதப்பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.