தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் எம்.எஸ்.எம்.இ. செயலாக்க மையம் திறப்பு

சென்னையில், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் எம்.எஸ்.எம்.இ. செயலாக்க மையம் திறக்கப்பட்டது.

Update: 2023-06-08 18:45 GMT

சென்னையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் எம்.எஸ்.எம்.இ. செயலாக்க மையம் திறக்கப்பட்டது.

எம்.எஸ்.எம்.இ. செயலாக்க மையம்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 17 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் 533 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்களுடன் இந்தியா முழுவதும் இயங்கி வருகிறது. 50 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறது. இந்த வங்கியின் முதல் பிரத்யேக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை (எம்.எஸ்.எம்.இ.) செயலாக்க மையத்தை சென்னையில் திறந்துள்ளது.

இந்த மையம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தேவைகளை சரியான நேரத்தில் பூர்த்தி செய்யவும், கடன் செயலாக்க நேரத்தை குறைக்கவும், வங்கியின் எம்.எஸ்.எம்.இ. பிரிவில் வழங்கப்படும் கடன் அளவை அதிகரிக்கவும் உதவும்.

200 கிளைகளில்...

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் தமிழகத்தில் கோவை, மதுரை, தூத்துக்குடியிலும் எம்.எஸ்.எம்.இ. செயலாக்க மையங்களை திறக்க தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி இலக்கு வைத்துள்ளது. இந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரை இந்தியா முழுவதும் பிற நகரங்களில் இந்த செயலாக்க மையங்கள் திறக்கப்பட உள்ளன. இந்த மையத்துடன் இணைக்கப்பட்ட தொடர்பு மேலாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற சரியான முன்மொழிவை வழங்குவதில் இருந்து, கடன் வழங்கும் நடைமுறையின் இறுதி வரை உதவுவார்கள். இந்த சேவைகள் ஆரம்பத்தில் தமிழகத்தில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 200 கிளைகளில் வழங்கப்படுகிறது.

இந்த மையம் வாடிக்கையாளர்களுக்கு சேவைகள் மற்றும் கடன்களை சிறந்த முறையில் வழங்குவதை உறுதி செய்யவும், முன்மொழிவுகள் மற்றும் கடன் முடிவுகளை பிரிக்கவும், கடன் மதிப்பீடு மற்றும் அனுமதியில் சிறந்த முன்னேற்றத்தை உறுதி செய்யவும், சீரான மதிப்பீட்டு தரத்தை பேணவும், உயர் மதிப்பீட்டு தரத்தை பராமரிக்கவும், கடன் அனுமதி அளிப்பதற்கான நேரத்தை குறைக்கவும், வெளிப்படைத் தன்மையை கடைபிடிப்பதற்காகவும் திறக்கப்பட்டு உள்ளது.

சிறந்த சேவை

இதுகுறித்து தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குனரும், முதன்மை செயல் அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணன் கூறுகையில், "எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள், இந்திய பொருளாதாரத்தில் வளர்ச்சி எந்திரம். எங்கள் கடன் திட்டங்கள் மற்றும் சேவைகளை சிறந்த முறையில் வழங்க கவனம் செலுத்துவது மூலம் எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு சிறந்த சேவை அளிக்க உறுதி பூண்டு உள்ளோம். அவர்களுக்கு ஆதரவு வழங்குவது எங்கள் கடமையாகும். எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களின் முக்கிய செயல்பாடுகள் இருக்கும் இடங்களில் எம்.எஸ்.எம்.இ. செயலாக்க மையத்தை நிறுவ, கடன் தரத்துடன், கடன் விரிவாக்கத்தில் சிறப்பாக கவனம் செலுத்த உறுதி அளிக்கிறோம்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்