சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-08-16 22:00 GMT

சென்னை,

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் சத்ரியன் வேணுகோபால் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து சமூகத்தினரும் பயன்பெறும் வகையில், தமிழகத்தில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதின் மூலம் அனைத்து சமூக மக்களும் சம உரிமை பெற்று சமூக நீதியை நிலைநாட்ட முடியும்.

மேலும் விமான நிலையங்கள், என்.எல்.சி., ரெயில்வே என அனைத்து துறைகளிலும் பணியாற்றும் வெளிமாநிலத்தவரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இங்கு தமிழகத்தை சார்ந்த பூர்வகுடி மக்களுக்கு வாய்ப்புகள் புறக்கணிக்கப்படுகின்றன. எனவே இந்தநிலையை மாற்றியமைக்க சட்ட வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து முறைப்படி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையிலான வாய்ப்புகளை வழங்கினால் தான் இதற்கு தீர்வு காண முடியும்.

தமிழகத்தில் இருக்கும் மத்திய அரசு சார்ந்த வேலைகளில் தமிழர்களுக்கு 90 சதவீதம் ஒதுக்கவேண்டும், அதே போல் மாநில அரசு வேலைகளில் தமிழர்களுக்கு 100 சதவீதம் ஒதுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்