தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை அடுத்த ஆண்டு அரசியல் கட்சியாக மாற்றப்படுவதற்கு தகுதிப்படுத்தபடும் என கரூரில் நடந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Update: 2022-10-02 19:48 GMT

பொதுக்குழு கூட்டம்

கரூரில் நேற்று தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு நிறுவனத் தலைவர் தனியரசு தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை அடுத்த ஆண்டு அரசியல் கட்சியாக மாற்றப்படுவதற்கு தகுதிப்படுத்தப்படும். தி.மு.க. அரசு பதவியேற்று 15 மாதங்களில் தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றையும் நிறைவேற்றி, சட்டம் ஒழுங்கையும் சிறப்புடன் பாதுகாத்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உழைத்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது,

மத்திய அரசின் புதிய வணிக கொள்கை சில்லறை வியாபாரத்தை ஒழித்து கார்ப்பரேட் பெருவணிக நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் முறையை கைவிட்டு சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு சலுகையும், ஊக்கமும் தந்து அவர்களை பாதுகாத்திட மத்திய அரசை கேட்டுக்கொள்வது, நாட்டில் பெருகிவரும் மது, கஞ்சா போதைப் பொருட்கள் நடமாட்டத்தை அறவே ஒழித்து ஒழுக்கமும், ஆரோக்கியமும் நிலை பெற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் அருள் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி

மாநில பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்த பிறகு நிறுவனத்தலைவர் தனியரசு நிருபர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க 27 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளோம். தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களின் அன்பை பெற்று வருகிற 2023-ம் ஆண்டு அக்டோபர், நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் பேரவை சார்பாக திறந்தவெளி மாநாடு நடத்தப்படும். குறைந்தபட்சம் 1 லட்சம் இளைஞர்களை திரட்டி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் மேற்படி மாநாடு நடைபெறும்.

இந்த மாநாட்டில் கட்சியின் பெயர் மற்றும் கொடி அறிவிக்கப்பட்டு, கட்சியின் கோட்பாடு, லட்சியங்கள் அறிவிக்கப்படும். இந்தியாவின் தேசிய பக்தி மற்றும் நாட்டுப்பற்றை ஊட்டி வளர்க்கிற இயக்கம்தான் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை. வருங்காலத்தில் அரசியல் சக்தியாக பரிணமித்து இன்னும் மக்களிடத்தில் மிகக்கூர்மையாக கொண்டு செல்லும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்