தமிழ்நாடுதான் இந்தியாவின் செஸ் தலைநகரமாக உள்ளது: முதல் - அமைச்சர் மு.க ஸ்டாலின்
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள செஸ் விளையாட்டு வீரர்களை வரவேற்கிறேன் என்று முதல் - அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார்.
சென்னை,
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவில் தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள செஸ் விளையாட்டு வீரர்களை வரவேற்கிறேன். நேரு விளையாட்டு அரங்கிற்கு பன்னாட்டு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் விழா அமைந்துள்ளது.
குஜராத் முதல்வராக இருந்த போது 20 ஆயிரம் வீரர்களுடன் செஸ் போட்டியை நடத்தியவர் பிரதமர் மோடி. வெறும் நான்கே மாதங்களில் பன்னாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பாக செய்தது. தமிழ்நாடுதான் இந்தியாவின் செஸ் தலைநகரமாக உள்ளது.
செஸ் ஒலிம்பியாட் தொடரை நடத்தும் வாய்ப்பு தமிழ்நாட்டிற்கு கிடைத்தது தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெருமை. இதன் தொடக்க விழா மிக எழுச்சியோடு தொடங்கப்பட்டு உள்ளது. நேரு விளையாட்டு அரங்கத்திற்கு பன்னாட்டு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் விழா அமைந்துள்ளது.
44 ஆவது சர்வதேச செஸ் விளையாட்டு போட்டிகள் ரஷியாவில் தான் முதலில் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா மற்றும் சில பிரச்சனைகள் காரணமாக ரஷியாவில் நடத்தமுடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் போட்டியானது இந்தியாவில் நடத்த இருந்தால், அது தமிழ்நாட்டில் நடத்தவேண்டும் என்று நான் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டேன்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து முதல் அறிவிப்பை கடந்த மார்ச் 16 ஆம் நாள் நான் அறிவித்தேன். இதுபோன்ற பன்னாட்டு போட்டி தொடரை சிறப்பான முறையில் செயல்படுத்துவதற்கு 18 மாதங்கள் ஆகும். ஆனால் தமிழக அரசு நான்கே மாதங்களில் இதன் தொடக்க பணிகளை சிறப்பாக செய்துமுடித்துள்ளது.
குறுகிய காலத்தில் சிறப்பாக செய்துமுடித்துள்ள விளையாட்டு துறையை சேர்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் நான் மனதார பாராட்டி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இதன் தொடக்கவிழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடியை அழைக்க டெல்லிக்கு செல்லலாம் என நினைத்தேன். ஆனால் கொரோனா தொற்றின் காரணமாக என்னால் நேரில் சென்று அழைக்கமுடியவில்லை. நீங்கள் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள், நான் நிச்சயம் கலந்துகொள்வேன் என பிரதமர் மோடி உறுதியளித்தார். இந்த விழா இந்தியாவிற்கே பெருமை தரக்கூடியது என பிரதமர் குறிப்பிட்டார்.
போட்டியின் தொடக்கவிழா இங்கு நடைபெற்றாலும், போட்டியானது முழுக்க இயற்கை எழில் கொஞ்வும் மாமல்லபுரத்தில் தான் நடைபெற உள்ளன. இந்தியாவின் மொத்தம் 73 செஸ் கிராண்ட்மாஸ்டர்களில் 23 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.
இப்போட்டியின் மூலம் தமிழகத்தில் விளையாட்டு துறை மட்டுமல்ல. சுற்றுலாத்துறையும், தொழில்துறையும் மிகுந்த வளர்ச்சியை பெற இருக்கிறது. மேலும் செல்லப்போனால், தமிழ்நாட்டின் வளர்ச்சியும், தமிழக அரசின் வளர்ச்சியும் இன்று முதல் மேலும் மேலும் உயரும்.
இந்த உயர்வு சாதாரணமாக கிடைத்துவிடுவது அல்ல. சரியான திட்டமிடல் மற்றும் கடின உழைப்பின் விளைவே இந்த உயர்வு. இந்திய கண்டத்தில் முதல் முறையாகவும், ஆசிய கண்டத்தில் மூன்றாவது முறையாகவும் இந்த செஸ் போட்டிகள் நடந்திருக்கின்றது.
இந்த செஸ் போட்டியானது வெறும் போட்டி மட்டுமல்ல. உலகலாவிய சகோதரத்துவத்தை எடுத்துக்கூறுவதாக உள்ளது. இத்தகைய மிகப்பெரிய போட்டியின் துவக்கவிழாவிற்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இதுபோன்ற வாய்ப்புகளை தமிழகத்திற்கு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்விளையாட்டில் கலந்துகொள்ள வருகைதந்துள்ள அனைவருக்கும் வரவேற்று என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி வணக்கம்..இவ்வாறு அவர் பேசினார்.