தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரிகள் ஆசிரியர் கழகம் சார்பில் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எம்.தேசிங்குராஜன் தலைமை வகித்தார். சுதாகர், இளவள்ளல் முன்னிலை வகித்தனர். புஷ்பராஜ் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை மாநில பொருளாளர் சி.ஜெயக்குமார் தொடங்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், ஜூலை 1-ந் தேதி முதல் முடக்கி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உடனடியாக வழங்க வேண்டும், 2004 முதல் 2006 வரை பணியில் அமர்த்தப்பட்ட ஆசிரியர்களை நியமன நாளில் இருந்து பணி வரன்முறை செய்ய வேண்டும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அக்டோபர் மாத ஊதியம் இன்னும் வழங்கப்படாத நிலை உள்ளது. கல்வி அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மாவட்ட சட்ட செயலாளர் சாய் குமார், தலைமை நிலைய செயலாளர் எம்.சுரேஷ், மாவட்ட செய்தி தொடர்பாளர் பி. ரவிச்சந்திரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மதுரா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ஆர்.துக்கன் நன்றி கூறினார்.