தமிழகத்தை கடன்கார மாநிலமாக மாற்றியதுதான் தி.மு.க. சாதனை: அண்ணாமலை

இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழகம்தான் என்று அண்ணாமலை கூறினார்.

Update: 2024-01-29 18:52 GMT

சங்கராபுரம்,

தமிழக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் நடைபயணமாக சென்று பொதுமக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து ஆதரவு திரட்டி வருகிறார். நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பொதுமக்களை சந்தித்து ஆதரவு கோரினார். 

தொடர்ந்து அவர் திறந்த வேனில் நின்றவாறு பேசியதாவது:-

மத்திய அரசின் திட்டங்கள் இந்த தொகுதியில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றால் 40 சதவீதம் கமிஷன் இல்லாமல் கொண்டு வருவது கஷ்டமாக உள்ளது. 2 உதயசூரியனும் சேர்ந்து சங்கராபுரம் தொகுதியை முன்னுக்கு கொண்டு வராமல் பின்தங்கிய நிலையிலேயே வைத்துள்ளனர்.

தமிழகத்தில் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்கவில்லை. பிரதமர் மோடி நவோதயா பள்ளியை இந்தியா முழுவதும் கொண்டு வந்துள்ளார். ஆனால் தமிழகத்தில் மட்டும் இந்த பள்ளிக்கூடங்களுக்கு அனுமதி இல்லை. இலவசமாக மத்திய அரசு கல்வியை கொடுப்பதற்கு தலைகீழாக இருந்தும் கூட அதை தமிழகத்தில் அனுமதிக்கப்படவில்லை. ஏனென்றால் தி.மு.க.வினர் நடத்தும் தனியார் பள்ளிகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

கல்வியை பட்டித்தொட்டியெல்லாம் பரப்ப வேண்டும் என்பதே இந்த பயணத்தின் நோக்கம். தமிழகத்தை கடன்கார மாநிலமாக மாற்றியது தான் தி.மு.க. சாதனை.

இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழகம். ஒரு ரேஷன் அட்டையின் மீது ரூ.3 லட்சத்து 52 ஆயிரம் கடன் உள்ளது.

குடிகாரர்கள் மாநிலமாக மாற்றியது தி.மு.க.வின் 2-வது சாதனை. மதுவை ஒழிக்கக்கூடிய சக்தி பா.ஜனதாவுக்கு மட்டும் தான் உள்ளது. தமிழகத்தில் கள்ளுக்கடைகளை திறப்பதற்கான நேரம் வந்து விட்டது. சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க.வினர் ரூ.6 ஆயிரம் கொடுத்தனர். ஆனால் அந்த ரூ.6 ஆயிரம் கொடுத்தது மோடி. கவர் கொடுத்தது மட்டும் ஸ்டாலின். ஊழல் வாதிகளுக்கு தமிழகத்தில் இடம் கொடுக்கக்கூடாது. குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 3-வது முறை நீங்கள் மோடிக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்