உத்திரமேரூரில் வைகுண்ட பெருமாள் கோவில் கல்வெட்டுகளை பார்வையிட்ட தமிழக கவர்னர்

உத்திரமேரூர் வைகுண்ட பெருமாள் கோவில் கல்வெட்டுகளை, தமிழக கவர்னர் நேற்று பார்வையிட்டு குடவோலை தேர்தல் குறித்த விளக்கங்களை கேட்டறிந்தார்.

Update: 2023-07-27 10:33 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பஜார் வீதியில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள உலக புகழ் பெற்ற குடவோலை முறை கல்வெட்டு உள்ள வைகுண்ட பெருமாள் கோவிலில் நேற்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் நேரில் வந்து கல்வெட்டுகளை பார்வையிட்டார். முன்னதாக கவர்னருக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்விமோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதனை தொடர்ந்து போலீஸ் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றுக்கொண்டார். பின்னர் கோவில் அர்ச்சகர்கள் சார்பில் கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி அங்கு உள்ள கல்வெட்டுகளை பார்வையிட்டார்.

அப்போது தொல்லியல் துறை அலுவலர்கள் கோவில் கல்வெட்டுகள் குறித்து கவர்னரிடம் விளக்கமளித்தனர். அவர்களிடம் சில விளக்கங்களை கவர்னர் கேட்டு தெரிந்து கொண்டார். பின்னர் கோவிலுக்கு சென்று வைகுண்ட பெருமாளை தரிசனம் செய்தார். கவர்னர் ஆர்.என்.ரவி வருகையையொட்டி உத்திரமேரூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்