தமிழ்நாடு கவர்னர் போட்டி அரசாங்கம் நடத்தி வருகிறார் -கி.வீரமணி குற்றச்சாட்டு

தமிழ்நாடு கவர்னர் போட்டி அரசாங்கம் நடத்தி வருகிறார் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டினார்.

Update: 2023-10-20 18:49 GMT

திருச்சி,

திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் நேற்று திராவிடர் கழக தலைமை செயற்குழு கூட்டம் அதன் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் சமூக நீதியை நிலைநாட்டவும், மக்களின் சமூக, பொருளாதார கல்வி நிலையை அறியவும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மத்திய பா.ஜ.க. அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை கண்டித்து வருகிற 25-ந் தேதி முதல் நவம்பர் 3-ந் தேதி வரை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மேற்கொள்ளும் பரப்புரையை வெற்றிகரமாக நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனைதொடர்ந்து கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

போட்டி அரசாங்கம்

பல்கலைக்கழகங்களில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவது வழக்கமான நடைமுறைகளில் ஒன்று. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக பாடுபட்ட தொழிலாளர் தலைவர் சங்கரய்யாவுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி அதற்கு ஒப்புதல் தராமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. கவர்னருக்கு இல்லாத அதிகாரத்தையெல்லாம் அவர் செய்து கொண்டு இருக்கிறார். யாருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என்பது பல்கலைக்கழக ஆட்சிக்குழுவின் முடிவு. அதில் கவர்னர் தலையிட முடியாது.

தற்போது கவர்னர் அவருக்கான பணியை செய்யாமல் போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார். மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் நிச்சயமாக கவர்னர் என்ற பதவி இருக்க வேண்டுமா? என்ற கேள்வி மறுபரிசீலனைக்கு உள்ளாகும். உடல் உறுப்பு தானம் கொடுத்தவர்களுக்குகூட அரசு மரியாதை வழங்குகிற மகத்தான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. ஆகவே பங்காரு அடிகளாரின் மனிதநேயத்தை போற்றுவது அரசின் கடமை. ஆகவே அவருக்கு அரசு மரியாதை வழங்குவதில் தவறில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்