தமிழக அரசு போராடி காவிரி நீரை விவசாயிகளுக்கு பெற்றுத்தரும்-சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

விவசாயிகள் பாடுபட்டு விளைவித்த பயிரை கருக விடமாட்டோம் எனவும், தமிழக அரசு போராடி காவிரி நீரை பெற்று தரும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.

Update: 2023-09-15 18:56 GMT

மகளிர் உரிமைத்தொகை

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இது மாதா மாதம் தொடரும். மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இதை அனைவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒரு சிலர் வசை பாடுவார்கள். வசை பாடுபவர்கள் வசைபாடி செல்லட்டும். அதைப்பற்றி எங்களுக்கு கவலை கிடையாது. இந்த திட்டத்தில் பயன் பெறாதவர்கள் மேல் முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டில் ஆர்.டி.ஓ. விசாரணை செய்து தகுதியானவர் என்று கண்டறியப்பட்டால் அவர்களுக்கு உறுதியாக உரிமைத்தொகை வழங்கப்படும்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு

சிறைச்சாலைகள் ஒருவரை திருந்தி வாழச்செய்யும் ஒரு இடமாக மாற்றும் பணி முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் நடைபெற்று வருகிறது. சிறை வளாகங்களில் திருக்குறள் உள்ளிட்ட நல்வழிப்படுத்தும் போதனைகள் கூறப்பட்டு வருகிறது. நூலகங்களில் வாசிப்பு என்பது சிறைச்சாலைகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அது சிறைவாசிகளுக்கு மட்டும் அல்ல, சிறைத்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கும் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறப்பு முகாமில் உள்ள முருகன் உள்ளிட்டவர்கள் வெளியே வருவது குறித்து எங்கள் கையில் ஏதுமில்லை. அவர்கள் எந்த நாட்டு பாஸ்போர்ட் வைத்து உள்ளார்களோ? அந்த நாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதுவும் மத்திய அரசுதான் முடிவு செய்யும்.

லஞ்ச ஒழிப்புத்துறை

தமிழக அரசு போராடி காவிரி நீரை விவசாயிகளுக்கு பெற்று தரும். யார் இங்கு ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்திற்கு எதிர்ப்பான மனநிலையை தான் அங்கு எடுப்பார்கள். தமிழக அரசை பொறுத்தவரை விவசாயிகள் பாடுபட்டு விளைவித்த பயிரை கருக விடாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ? கண்டிப்பாக நாங்கள் நடவடிக்கை எடுத்து நீரை பெற்றுத் தருவோம். பயிர் காப்பீடு அனைத்து பயிர்களுக்கும் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமல் அரசு நடவடிக்கை எடுக்கும்.

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மீது நீதிமன்றம் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு குறித்து கருத்து கூறினால் அது நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடும். நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகளில் தானாக முன்வந்து வழக்குகளை எடுத்துள்ளது. இதில் நியாயமான முறையில் எங்களுடைய விசாரணை நடைபெற்றுள்ளது என்று லஞ்ச ஒழிப்புத்துறை வாதங்களை எடுத்து சொல்லும். கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வழக்கு விசாரணை செய்யாமல் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால் தி.மு.க. ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறையால் முறையான விசாரணை நடைபெற்று சாட்சியங்கள் இல்லாததால் வழக்குகளில் தொடர்புடையவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்