விவசாயிகளை காக்கும் வகையில் தமிழக அரசு பயிர்க்காப்பீட்டு நிறுவனம் தொடங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

விவசாயிகளை காக்கும் வகையில் தமிழக அரசு பயிர்க்காப்பீட்டு நிறுவனம் தொடங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2023-10-13 11:54 GMT

சென்னை,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இழப்பீடு அவர்களின் துயரைத் துடைப்பதை விட, அதிகரிக்கும் வகையில்தான் உள்ளது. ஏக்கருக்கு ரூ.9,484 காப்பீட்டு பிரீமியமாக வசூலிக்கப்படும் நிலையில், பலருக்கு குறைவாகவே இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது. காப்பீட்டு நிறுவனங்கள் பகல் கொள்ளையர்களாக மாறி வருவது கண்டிக்கத்தக்கது.

2021-2022-ம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் சம்பா நெற்பயிர்களுக்கான காப்பீட்டு பிரீமியமாக ரூ.2,413 கோடி வசூலிக்கப்பட்ட நிலையில், விவசாயிகளுக்கான இழப்பீடாக ரூ.481 கோடி மட்டும்தான் காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்பட்டது.

கடந்த ஐந்தாண்டுகளில் பயிர்க்காப்பீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட விதம் குறித்து ஆய்வு செய்தால், பயிர்க்காப்பீட்டுத் திட்டம் என்பது விவசாயிகளுக்கானது அல்ல, காப்பீட்டு நிறுவனங்களுக்கானதுதான் என்பதை புரிந்து கொள்ள முடியும். எனவே தமிழக அரசே பயிர்க்காப்பீட்டு நிறுவனம் ஒன்றை தொடங்க வேண்டும். அதன் மூலம் விவசாயிகளை காக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்