'பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும்' - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் பள்ளிகளை தரம் உயர்த்தும் அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2023-04-28 11:45 GMT

சென்னை,

பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டத்தின்படி ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு நிலையிலும் 100 பள்ளிகள் புதிதாக உருவாக்கப்படும் என்றும் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில் பதிவில் கூறியிருப்பதாவது;-

"தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தும் திட்டத்தின்படி, கடந்த இரு ஆண்டுகளாக ஓர் அரசு பள்ளி கூட தரம் உயர்த்தப்படவில்லை. நடப்பாண்டிற்கான மானியக் கோரிக்கையிலும் இதுகுறித்து அறிவிக்கப்படாதது மிகுந்த வருத்தமளிக்கிறது.

பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டத்தின்படி ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு நிலையிலும் 100 பள்ளிகள் புதிதாக உருவாக்கப்படும். அவற்றுக்காக புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும். அது கிராமப்பகுதிகளில் கல்வி வளர வகை செய்திருக்கும். இத்தகைய சிறப்புமிக்கத் திட்டத்தை கைவிட்டு விடக்கூடாது. பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவது புதிய அறிவிப்புகள் வராதது ஒருபுறம் இருக்க, 2020-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட 165 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தும் திட்டம் மூன்று ஆண்டுகளாகியும் செயல்படுத்தப்படவில்லை.

எனவே, ஒவ்வொரு நிலையிலும் குறைந்தது 200 பள்ளிகளையாவது தரம் உயர்த்துவதற்கான அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 165 பள்ளிகளையும் தரம் உயர்த்த வேண்டும்."

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்