கவர்னர் நியமித்த பிரதிநிதியை தமிழக அரசு நிராகரித்தது: அரசிதழிலும் வெளியிட்டது

துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) சார்பில் கவர்னர் நியமித்த உறுப்பினரை தமிழ்நாடு அரசு நிராகரித்ததோடு, அதனை அரசிதழிலும் வெளியிட்டு உள்ளது.

Update: 2023-09-20 19:07 GMT

சென்னை,

மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி காலியானதும், அந்த இடங்களுக்கு தகுதியானவரை தேர்வு செய்ய பல்வேறு நிலைகள் உள்ளன. அதன்படி, துணைவேந்தர் தேடுதல் குழு ஒன்று நியமிக்கப்பட்டு, அந்த குழுவின் விவரங்கள் அரசிதழிலும் வெளியிடப்படும்.

அந்த குழு, துணைவேந்தர் பணியிடத்துக்கு விண்ணப்பிப்பவர்களில் 3 பேரை தேர்வு செய்து, பல்கலைக்கழகங்களின் வேந்தரான கவர்னரிடம் ஒப்படைப்பார்கள். அவர் அந்த 3 பேரில் ஒருவரை துணைவேந்தராக நியமனம் செய்வார்.

இந்த நடைமுறைதான் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அதன்படி, கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக தேடுதல் குழுவுக்கு கடந்த ஆண்டு (2022) முறையே அக்டோபர், நவம்பர் மாதங்களில் தேடுதல் குழு நியமித்து அரசிதழ் வெளியிடப்பட்டது.

யு.ஜி.சி. சார்பில் உறுப்பினர்

இந்த நிலையில் துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) சார்பில் ஒரு பிரதிநிதியை நியமனம் செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழகங்களின் வேந்தரும், கவர்னருமான ஆர்.என்.ரவி வலியுறுத்தினார். இதற்கான தேடுதல் குழு தங்களுடைய பணியை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

கவர்னரின் இந்த கருத்துக்கு, தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை எதிர்ப்பு தெரிவித்தது. அமைச்சர் க.பொன்முடி அதற்கு அவசியம் இல்லை என்று கூறி வந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த 6-ந் தேதி கவர்னர் மாளிகை சார்பில் ஒரு அறிக்கை வெளியானது. அதில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் ஒரு பிரதிநிதியை நியமித்து கவர்னர் உத்தரவிட்டு இருந்தார்.

கவர்னரின் இந்த உத்தரவு தன்னிச்சையான முடிவு என்றும், மரபு மீறிய செயல் என்றும், இதனை சட்டப்படி எதிர்கொள்ளப்படும் என்றும் அன்றைய தினமே உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.

அரசிதழ்

துணைவேந்தர் தேடுதல் குழுவில் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள், தங்களுக்கான பணிகளை தொடங்குவதா? வேண்டாமா? என்ற இரட்டை மனநிலையில் இன்றளவும் இருந்து வருகின்றனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு தேடுதல் குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்கள், கவர்னர் மாளிகை சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் விவரங்கள் அடங்கிய அரசிதழை தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கிறது. அதில் குழுவின் ஒருங்கிணைப்பாளராக வேந்தர் சார்பில் கர்நாடக மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பட்டு சத்யநாராயணா, சிண்டிகேட் சார்பில் மாநில திட்ட கமிஷன் உறுப்பினர் கே.தீனாபண்டு, செனட் சார்பில் பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி.ஜெகதீசன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பிரதிநிதி நிராகரிப்பு

ஏற்கனவே கடந்த 6-ந் தேதி கவர்னர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்டு இருந்த செய்திக்குறிப்பில் இதே பெயர் கொண்ட சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு பட்டியலில், 4-வது உறுப்பினராக பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் தெற்கு பீகார் மத்திய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எச்.சி.எஸ்.ரத்தூர் ஒரு பிரதிநிதியாக இடம்பெற்று இருந்தார்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் கடந்த 13-ந் தேதி வெளியிடப்பட்டு தற்போது உலா வரும் இந்த அரசிதழில், பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் நியமிக்கப்பட்ட பிரதிநிதி நிராகரிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கவர்னர் மாளிகைக்கும், தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல் போக்கு இருந்துவரும் சூழலில், தற்போது வெளியாகியிருக்கும் தமிழ்நாடு அரசின் அரசிதழ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்