புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்.. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்

புயல் நேரத்தில் மழையோடு பலத்த காற்றும் வீசும் என்பதால் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டுமென அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

Update: 2023-12-02 08:09 GMT

கோப்புப்படம் 

சென்னை,

வங்கக்கடலில் புயல் உருவாகவுள்ள நிலையில், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

"புயல் சென்னை ஓரமாக ஆந்திரா செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயலை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. புயல் நேரத்தில் மழையோடு பலத்த காற்றும் வீசும் என்பதால் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.

வீடுகளில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். மின்சார கம்பங்கள், வயர்கள் செல்லும் இடங்களில் கவனமாக செல்ல வேண்டும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிப்பு வரலாம் என்று கருதுவதால் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரை மழைக்கு இதுவரை 5 பேர் இறந்துள்ளார்கள். கால்நடைகள் 98 பலியாகி உள்ளன. 420 குடிசைகள் சேதம் அடைந்துள்ளன. மழைக்கு இறந்தவர்கள் குடும்பத்துக்கு உடனடியாக ரூ.4 லட்சம் நிவாரணமாக வழங்கப்படுகிறது.

கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் 121 நிவாரண முகாம்களும் 4 ஆயிரம் பள்ளிகள் மற்றும் திருமண மண்டபங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. சென்னையில் மட்டும் 162 முகாம்கள் மொத்தம் 1 லட்சத்து 13 ஆயிரம் பேரை தங்கவைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களும் தயார் செய்யப்பட்டுள்ளன. மழையோடு காற்றும் வீசும் என்று எதிர்பார்ப்பதால் மரக்கிளைகள் முறிந்து விழலாம். எனவே, பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்." இவ்வாறு அவர் கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்