டாஸ்மாக் வருமானத்தில் தமிழக அரசு நடக்கவில்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக அரசு மீது குற்றச்சாட்டுக்களை தேடி தேடி வைக்கின்றனர் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
சென்னை,
சென்னை திருமங்கலத்தில் தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை ஆய்வு செய்தபின் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
டாஸ்மாக் கடை வருமானத்தில் தமிழக அரசு நடப்பதாக கூறுவது வேதனைக்குரியது. டாஸ்மாக் வருமானத்தில் தமிழக அரசு நடக்கவில்லை. நிர்வாக சீர்திருத்தம் செய்யும்போது, திரித்து கூறுகிறார்கள். இதுவரை 96 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் 500 டாஸ்மாக் கடைகள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக அரசு மீது குற்றச்சாட்டுக்களை தேடி தேடி வைக்கின்றனர்.
மால்களில் உள்ள டாஸ்மாக் கடைகளின் உள்பகுதியில்தான் தானியங்கி விற்பனை இயந்திரம் உள்ளது. சாலையிலோ, பொது இடங்களிலோ இந்த இயந்திரம் இருப்பது போல எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன. மால்களில் டாஸ்மாக் கடைகள் அதிமுக ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டன. டாஸ்மாக் நிறுவனத்தை ஒதுக்கிவைத்துவிட்டு ஆட்சி நடத்தியதுபோல எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.
தானியங்கி மது விற்பனை இயந்திர விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கிறார்கள். காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை தான் இந்த கடை செயல்படுகிறது. மாலில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தானியங்கி இயந்திரம் மூலம் 24 மணி நேரமும் மது எடுக்க முடியாது. மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் தானியங்கி இயந்திரம் மதுவிற்பனை நடைமுறையில் உள்ளது. ஏற்கனவே உள்ள மால் ஷாப்க்களில் மட்டுமே தானியங்கி மது வழங்கும் இயந்திரம் உள்ளது.
டாஸ்மாக்கில் ரூ.5, ரூ.10 என கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 1,977 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.5.5 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிர்வாகம் வெளிப்படைத்தன்மையுடன், நேர்மையாக நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.