தமிழக அரசின் சாதனை புகைப்பட கண்காட்சி- விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்
கிருஷ்ணகிரியில் தமிழக அரசின் சாதனைகள், திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி -விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நாளை (சனிக்கிழமை) முதல் 10 நாட்கள் நடக்கிறது.
கிருஷ்ணகிரி:-
கிருஷ்ணகிரியில் தமிழக அரசின் சாதனைகள், திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி -விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நாளை (சனிக்கிழமை) முதல் 10 நாட்கள் நடக்கிறது.
ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பாக அரசு துறைகளை ஒருங்கிணைத்து அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் பேசும் போது கூறியதாவது:-
10 நாட்கள் நடக்கிறது
தமிழக அரசின் அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் மற்றும் உணவுத் திருவிழா நடத்திடவும், இதில் அரசின் முக்கிய திட்டங்கள், சாதனைகள் குறித்த விவரங்களுடன் பொதுமக்கள் பயனடையும் வகையில் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில் புகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) முதல் வருகிற 23-ந் தேதி வரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள அரங்கத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, மகளிர் திட்டம், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், உணவு பாதுகாப்புத்துறை, சுற்றுலாத்துறை, சுற்றுசூழல் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட தொழில் மையம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து நடத்தப்பட உள்ளது.
செயல் விளக்க அரங்கம்
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம் தமிழக அரசின் முக்கியத் திட்டங்கள், சாதனைகள் மற்றும் பயனாளிகளுடனான புகைப்படங்கள், அரசுத் திட்டத் தொடக்க விழா குறித்த புகைப்படக் கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளது.
வேளாண்மை துறையால் விவசாயிகளுக்கான அரசின் வேளாண் திட்டங்கள் குறித்த கண்காட்சி அரங்குகளும், உணவு பாதுகாப்புத் துறையால் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உணவு பொருட்கள் தரம் குறித்த விழிப்புணர்வு செயல் விளக்க அரங்கம் அமைக்கப்பட உள்ளது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், மகளிர் திட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து மகளிர் சுய உதவிக் குழுக்களை கொண்டு தெருவோர உணவகம், சிறுதானியம் மற்றும் பல்சுவை உணவுடன் கூடிய உணவுத் திருவிழா நடத்துதல், பாரம்பரிய ஊட்டச்சத்து நிறைந்த இயற்கை உணவு தயாரித்து உணவுத் திருவிழா நடத்தவும், மாவட்ட சுற்றுசூழல் துறை மற்றும் வனத்துறை சார்பாக மஞ்சப்பை, மரக்கன்றுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறப்பாக பணியாற்றிட வேண்டும்
மேலும் சமூக நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட தொழில் மையம், உள்ளிட்ட துறைகளால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த கண்காட்சி அரங்குகள் இடம் பெற உள்ளன.
அதே போல கலை பண்பாட்டுத் துறையின் மூலம் உள்ளூர் கலைஞர்களைக் கொண்டு, ஒயிலாட்டம், தப்பாட்டம் மற்றும் கிராமியக் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இது தவிர பள்ளி கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.
இந்த புகைப்பட கண்காட்சியை நமது மாவட்டத்தில் சிறப்பாக நடத்திட அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன், மாவட்ட சுற்றுலா அலுவலர் கஜேந்திர குமார், மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, உட்படதுறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.