பஹ்ரைனில் தமிழக மீனவர்கள் கைது: விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம்

பஹ்ரைனில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க தூதரக உதவிகளை வழங்கிட வலியுறுத்தி மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2024-09-26 13:24 GMT

கோப்புப்படம் 

சென்னை,

பஹ்ரைன் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 28 மீனவர்களை விரைவில் விடுவிப்பதற்குத் தேவையான சட்ட உதவிகள் மற்றும் தூதரக உதவிகளை வழங்கிட வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரை கிராமத்தைச் சேர்ந்த 28 மீனவர்கள் ஈரான் நாட்டிற்குச் சென்று மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டிருந்த நிலையில் அங்கு எல்லை தாண்டிச் சென்றதாக பஹ்ரைன் கடலோரக் காவல் படையினரால் கடந்த 11-09-2024 அன்று கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பஹ்ரைன் கடலோரக் காவல் படையினரின் இந்த கைது நடவடிக்கையின் காரணமாக, மீனவர்களது வருமானத்தை மட்டுமே நம்பியுள்ள அவர்களது குடும்பத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் தனது கடிதத்தில் கவலைபடத் தெரிவித்துள்ளார்.

எனவே, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விரைவில் விடுவிப்பதற்குத் தேவையான சட்ட உதவிகள் மற்றும் தூதரக உதவிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத்துறை மந்திரியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்