தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சிம்சன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் துரைராஜ், டெல்டா பாசனதாரர்கள் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன், இயற்கை விவசாயி ராமலிங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், தமிழக நீர்நிலைகளை பாதிக்கும் ஒருங்கிணைந்த நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2023-ஐ திரும்பபெற வேண்டும், போதுமான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் செறிவூட்டப்பட்ட அரிசியை மக்களுக்கு வினியோகம் செய்வதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.