தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-17 18:30 GMT

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஒன்றிய செயலாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார். சேகர், தனவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதேபோல் திருமானூரில் நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் செந்தில் வேலன், மாவட்ட செயலாளர்கள் ஜெகநாதன், மணிவேல், மாவட்ட துணைத்தலைவர் மணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

ரேஷன் கடைகள் மற்றும் ஊட்டச்சத்து மையங்களில் செரிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்து தமிழ்நாட்டில் பரவலாக அனைத்து இடங்களிலும் நடைமுறைப்படுத்தியுள்ளனர். செரிவூட்டப்பட்ட அரிசியின் நன்மைகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து மக்கள் மத்தியில் எவ்வித விழிப்புணர்வும் இல்லாத நிலையில் அவற்றை ரேஷன் கடைகளில் வழங்கக்கூடாது.

நெல் கொள்முதல் நிலையங்கள்

அரசு அறிவிக்கும் புதிய திட்டங்களுக்கு 100 எக்டேர் வரை நிலங்களில் உள்ள நீர்வழி பாதையை தனியாருக்கு தாரை வார்க்கும் புதிய நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும். புதுச்சாவடியில் மீத்தேன் திட்டத்திற்காக விவசாயிகள் நிலத்தில் குழாய்கள் பதிப்பதை கைவிட வேண்டும். ஏலாக்குறிச்சி அருகே உள்ள அரசன் ஏரியை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பொன்னேரியை ஆழப்படுத்தி நான்கு வாய்க்கால்களை தூர்வார வேண்டும். பாண்டியனேரி, ஆவேரியை ஆழப்படுத்தி பாசன வசதியை விரிவுபடுத்த வேண்டும். 60 வயது முடிந்த அனைத்து விவசாயிகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து மூட்டைக்கு ரூ.40 வாங்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்