தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளன பொதுக்குழு கூட்டம்
தூத்துக்குடியில் தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளன பொதுக்குழு கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளன பொதுக்குழு கூட்டம் நேற்று தூத்துக்குடியில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. கூட்டத்துக்கு தூத்துக்குடி அனல்மின்நிலைய கிளை செயலாளரும், மாநில இணை செயலாளருமான முத்துகுமார் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் ஆவுடையப்பன், நெல்லை மின்வினியோக வட்ட கிளைத்தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் மூர்த்தி, மாநில தலைவர் தனசேகர், மாநில பொருளாளர் அருள்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் தமிழக மின்துறையை பொதுத்துறையாக நீடிக்க வேண்டும், 1.12.2019 முதல் ஊழியர்கள், பொறியாளர்கள் அனைவருக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கு வாரியமே தினக்கூலி ரூ.380 வழங்கி, படிப்படியாக நிரந்தரம் செய்ய வேண்டும், கேங்க்மேன் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், தூத்துக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசடி, இனிகோநகர் துணை மின்நிலையங்களில் அவுட்சோர்சிங் முறையில் வெளியாட்களை பணியமர்த்தாமல் புதிய பணியிடம் உருவாக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட பொதுச் செயலாளர் கிருஷ்ணராஜ், வங்கி ஊழியர் சங்கம் கிருஷ்ணமூர்த்தி, சமத்துவ மக்கள் கழக பொதுச் செயலாளர் ஜெபராஜ் டேவிட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.