ஊர்வலம்
தமிழ்நாட்டிற்கு பேரறிஞர் அண்ணாவால் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18-ந் தேதியை 'தமிழ்நாடு நாள்' விழா என கொண்டாட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து 'தமிழ்நாடு நாள்' விழா நேற்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதன்படி அரியலூர் மாவட்டத்திலும் 'தமிழ்நாடு நாள்' விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு நாள் விழா ஊர்வலம் நடைபெற்றது. அரியலூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஊர்வலம் அரியலூர் பழைய பஸ் நிலையம், அரியலூர் நகராட்சி அலுவலகம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் வழியாக சென்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிறைவுபெற்றது. ஊர்வலத்தில் மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டு, தமிழ்நாட்டின் சிறப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
கண்காட்சி
இதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு நாள் விழா குறித்த சிறப்பு புகைப்பட கண்காட்சியை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்து பார்வையிட்டார். தமிழ்நாடு நாள் முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் மெட்ராஸ் வரலாறு, வரைபடங்கள் போன்ற பல்வேறு தகவல்கள் அடங்கிய சிறப்பு புகைப்படங்கள் இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சி வருகிற 23-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியை மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பார்வையிட்டு தமிழ்நாடு நாள் வரலாறு குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
மாணவ, மாணவிகளுக்கு பரிசு
பின்னர் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற பெரிய திருக்கோணம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் விஸ்வாவுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், அரியலூர் அரசு மாதிரி பள்ளி மாணவர் திருமுருகனுக்கு 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், இறவாங்குடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி ஷாம்லி ஸ்ரீனிவாசுக்கு மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம், பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி வினோதராணிக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், கீழையூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி தர்ஷினிக்கு 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், பொய்யாதநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் அருண்குமாருக்கு 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் ஆகியவற்றுக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் இலக்குவன், அரியலூர் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுருளிபிரபு, உதவி மக்கள் செய்தி தொடர்பு அலுவலர்(செய்தி) பிரபாகரன், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சித்ரா, அரியலூர் நகர்மன்ற தலைவர் சாந்தி கலைவாணன், தாசில்தார் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.