தமிழ்நாடு துணிக்கடை பொன் விழா பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா
ஆற்காட்டில் தமிழ்நாடு துணிக்கடையின் பொன்விழா பிரமாண்ட ஷோரூமை வி.ஐ.டி.வேந்தர் ஜி.விசுவநாதன் திறந்துவைத்தார்.
திறப்பு விழா
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரில் தமிழ்நாடு துணிக்கடை 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதன் பொன் விழாவை முன்னிட்டு கடையை 4 தளங்களாக விரிவுபடுத்தி 50 ஆயிரம் சதுரடி பரப்பளவில் அண்ணா சாலை மற்றும் எம்.ஜி.ஆர். சாலை ஆகிய இரண்டு புறமும் வழி அமைத்து ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலேயே மிகப்பெரிய அளவில் மிகப்பிரமாண்டமாய் டி 2 கே என்ற புதிய வாசகத்துடன் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்தவர்களை மேலாளர் தமீம் வரவேற்றார்.
வி.ஐ.டி.வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி அண்ணா சாலையில் உள்ள ஷோரூமை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில் வரலாற்றில் முக்கியமான ஊர் ஆற்காடு. என்னுடைய வரலாற்றிலும் முக்கியமான ஊர் ஆற்காடு. 1967-ம் ஆண்டு வந்தவாசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட என்னையும், ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வீராசாமியையும் அண்ணா அறிமுகப்படுத்தி பேசினார். நான் அமைச்சராக இருந்ததற்கும் ஆற்காடு தொகுதிதான் காரணம். 1991-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.
குழுவாக இருந்து
தமிழகத்தில் 1500 நூற்பாலைகள் உள்ளது. இதன் மூலம் மூன்று கோடி பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். இலவசங்கள் அதிகமாக தருகிறார்கள். அதோடு நின்று விடாமல் வேலை வாய்ப்புகளும் அதிகம் தர வேண்டும். ஆரணி, காஞ்சீபுரம் பட்டு, குடியாத்தம் லுங்கிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் மூலம் பொருளாதாரம் வளர்ச்சி அடைகிறது. வணிகர்கள் குழுவாக இருந்து செயல்பட்டால் தான் மற்றவர்களுக்கு பயன்படும்.
பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த சவுகத் அலி தமிழ் பற்று, இனப்பற்று மிக்கவர். எனவே எனக்கு நண்பராக உள்ளார். நேர்மையுடனும், நாணயத்தோடும் செயல்படுவார். அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ.
ஆற்காடு ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்..ஏ. எம்.ஜி.ஆர். சாலை வழியில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பட்டு விற்பனை பிரிவில் ஆற்காடு நகரமன்ற தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். அதனை தொழிலதிபர் ஏ.வி.சாரதி பெற்றுக் கொண்டார். பட்டுச்சேலை பிரிவில் முதல் விற்பனையை நகரமன்ற துணைத்தலைவர் பவளக்கொடி சரவணன் பெற்றுக் கொண்டார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக ரத்தனகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத் மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் வினோத்காந்தி, மகாத்மா காந்தி இலவச முதியோர் இல்ல தலைவர் ஜே.லட்சுமணன், துணைத்தலைவர் எஸ்.ஆர்.பி.பென்ஸ்பாண்டியன், ராணிப்பேட்டை நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், வாலாஜா நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை, மேல்விஷாரம் நகரமன்ற தலைவர் எஸ்.டி.முகமதுஅமீன், வணிகர் சங்க பேரமைப்பின் மண்டல தலைவர் ஆம்பூர் கிருஷ்ணன், ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் பொன்.கு.சரவணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஷகில் நன்றி கூறினார்.