தமிழக முதல்-அமைச்சரின் கனவான போதையில்லா தமிழகம் விரைவில் உருவாகும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழக முதல்-அமைச்சரின் கனவான போதையில்லா தமிழகம் விரைவில் உருவாகும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
ராஜபாளையம்,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே அய்யனார் கோவில் சாலையில் உள்ள ராம்கோ தொழில் நுட்ப கல்லூரியில், தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான தலைமை பண்பு மேம்பாட்டிற்கான மாநில அளவிலான பயிற்சி வகுப்பு கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்த பயிற்சி 6 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இப்பயிற்சியில் தமிழகம் முழுவதிலும் உள்ள 38 மாவட்டங்களில் இருந்து 142 ஆண்கள் மற்றும் 60 பெண்கள் என 202 தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இக்கருத்தரங்கின் 3 வது நாள் பயிற்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தலைமை ஆசிரியர்களுக்கு அனுபவ பதிவாக இந்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் எழுத்தாளர்கள் அவர்களது அனுபவங்களை கூறும் போது, தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்பு அதிகரிக்கும்.
அரசாங்கம் கொண்டுவரக்கூடிய திட்டங்கள் குறித்து மேம்பாடு செய்வதற்காகவும், அதற்கான விழிப்புணர்வுக்காகவும், அரசின் திட்டங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு இதுபோன்ற பயிற்சிகள் உதவியாக இருக்கும். இந்த பயிற்சியின் அவசியம் குறித்து இன்னும் சில ஆண்டுகளில் தெரியவரும்.
இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத ஒரு பயிற்சியை ரூ. 9.5 கோடி மதிப்பீட்டில் தமிழக முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் செய்து வருகிறார். பள்ளி கல்வித்துறை சார்பில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வருகிறோம். மேலும் புதிய திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது.
மாவட்ட கலெக்டர் கருத்தரங்கில் போதை பழக்கத்திற்கு எதிராக முதல்-அமைச்சர் உரையாற்றி உள்ளார். முக கவசம் எவ்வாறு அணிய வேண்டும் என்பதும், போதை பழக்கத்திற்கான தீமைகள் குறித்தும் முதல்-அமைச்சர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
மேலும், போலீசார் சிறப்பாக செயல்பட்டு போதை பொருட்கள் விற்பனைக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சமூக நலத்துறை, சுகாதாரத் துறை மற்றும் போலீசார் மூலம் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நடத்தி வருகின்றோம்.
விரைவில் தமிழக முதல்-அமைச்சர் கனவாக இருக்கின்ற போதையில்லா மாநிலமாக தமிழ்நாடு உருவாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.