ரூ.15,610 கோடி தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் - அமைச்சர் தங்கம் தென்னரசு
ரூ.15,610.43 கோடி தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
சென்னை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கூட்டத்தில் வருகிற 9-ஆம் தேதி கூட உள்ள தமிழக சட்டப்பேரவையில் கவர்னர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
"தமிழ்நாட்டின் தொழில்துறைக்கு மேலும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கக்கூடிய வகையில் அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. மின்சார வாகன உற்பத்திக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய தொழில்நுட்ப முதலீடுகள் மூலம் 8,726 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 8 புதிய திட்டங்களை செயல்படுத்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.15,610.43 கோடி தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மின்னணு வாகன உற்பத்தி, ஆட்டோமொபைல், வயர்லெஸ் டெக்னாலஜி, ஆக்ஸிஜன் தொழிற்சாலை உள்ளிட்ட பல துறைகளில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதலீடுகள் பரவலான முறையில் அமையக்கூடிய வகையில் பெறப்பட்டுள்ளது. மின்னணுக் கொள்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தென் தமிழகத்தில் நிறைய முதலீடுகள் வந்துள்ளது. மேலும் பல முதலீடுகள் தென் தமிழகத்திற்கு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
பரந்தூர் விமான நிலையத்தையொட்டி ஏற்கனவே பல தொழிற்பூங்காக்கள் உள்ளது. பரந்தூர் விமான நிலையம் தொடர்பான முன் ஏல சந்திப்பில், அந்த பகுதி மக்களின் கருத்துகள் தொடர்பாக தொழில்நுட்பம் சார்ந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
போச்சம்பள்ளி, தேனி, புதுக்கோட்டை, சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளில் முதலீடுகள் வருகின்றன; தமிழ்நாட்டின் தொழில்துறைக்கு மேலும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கக்கூடிய வகையில் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இதுதவிர உலகப் பொருளாதார மன்றத்தில் கலந்துகொள்ளவுள்ளதாகவும், அதில் தமிழ்நாட்டின் இருப்பை பதிவு செய்வது முக்கியமானது என்றும், தமிழ்நாட்டுடன், மற்ற மாநிலங்களும் வருகிறார்கள். இதனால் நாங்கள் போகும் பாதையில் ஒளிவெள்ளமாகத் தெரிகிறது என பெருமிதமாக தெரிவித்துள்ளார்.